சஜித் மேற்கொண்ட தீர்மானம்

90 kk
90 kk

“கடன் எல்லையை அதிகரிக்க சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் ஆதரவளிக்காதமை மக்கள் விரோத தீர்மானமாகும். வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் இவ்வாறு செயற்பட்டதில்லை.”


இவ்வாறு இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.


சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


“புதிய அரசு ஆட்சிக்கு வந்ததுடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் அந்த அரசின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கடந்த அரசால் அனுமதிக்கப்பட்ட நிதி சில சந்தர்ப்பங்களில் போதாமல் இருக்கலாம்.


அவ்வாறான கட்டங்களில் இடைக்காலக் கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பித்து அதனை நாடாளுமன்றத்தில் சம்மதித்துக்கொள்வார்கள். அதுதான் நாடாளுமன்ற சம்பிரதாயம்.


கடந்த 1947ம் ஆண்டில் இருந்து அனைத்து அரசுகளும் இந்த முறையையே பின்பற்றி வருகின்றன.

ஆனால், கடந்த வியாழக்கிழமை ஆட்சிக்கு வந்த புதிய அரசு நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க இருந்த கணக்கறிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் ஆதரவளிக்க மறுத்துள்ளனர்.


அதனால் கணக்கறிக்கையை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமலே அதனை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் மேற்கொண்ட முதலாவது தீர்மானம் மக்கள் விரோத தீர்மானமாகும்” என்றார்.