சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு வரும் 5 ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு

மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு வரும் 5 ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு

மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரனை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் நாள்  வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி  தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது, கடந்த விசாரணையின்போது அரச தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களுக்கு காணாமல்போனோரின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் பிரதி வாதங்களை மன்றில் முன்வைத்தார்.

காணாமல் போனோரின் குடும்பங்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாவதற்கு அரச தரப்பு சட்டத்தரணியால் கடந்த வழக்கு விசாரணையின்போது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், இந்த வழக்கு இறந்தவர்களுடையதும் காணாமலாக்கப்பட்டவர்களினதும் வழக்கு என்பதால், அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்த முடியாது என மன்றில் சுட்டிக்காட்டினார்.

இதுவொரு மனிதாபிமான பிரச்சினை தொடர்பான வழக்கு எனவும் சட்டம் சம்பந்தமான பிரச்சினையாக இதனைக் கருத முடியாது எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.

காணாமற்போனோரின் பெற்றோர்கள் சுமார் ஆயிரம் நாட்களாக வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றமையை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் காணாமல்போனவர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காணாமல்போனோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகி இருப்பதாக தெரிவித்தார்.

காணாமல் போனோர் சார்பில் மன்றில் 13 சத்தியக்கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

மாதிரிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் பரிசோதனையின் ஊடாக மனித எச்சங்கள் 300 வருடங்கள் பழமை வாய்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளதை, பாதிக்கப்பட்ட மக்களும் சட்டத்தரணிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மன்றுக்கு அறிவித்தார்.

 இந்த நிலையில் மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு விசாரனை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் நாள்  வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பருத்தித்துறை முன்னாள் நகர பிதா காலமானார்

பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை தொகுதி முன்னாள் தலைவரும் ...