புதிய கட்சிகளை உருவாக்குவது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது

8 ad 4
8 ad 4

புதிய கட்சிகளை உருவாக்குவது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இம்முறை தேர்தலை இலக்காகக்கொண்டு இந்துக்கள் சார்பாக ஒரு அணியும், கிறிஸ்தவர்கள் சார்பாக இன்னொரு அணியும் உருவெடுத்திருப்பது சிறந்த விடயம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய அலங்கார நுழைவாயிலின் திறப்பு விழாவில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் கூறுகையில், “சார்ள்ஸ் நிர்மலநாதனை விட வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்து ஆலயங்களுக்கு உதவி செய்வதாக நான் நம்பவில்லை. ஆனாலும் இம்முறை தேர்தலை இலக்காகக் கொண்டு இந்துக்கள் சார்பாக ஒரு அணியும் கிறிஸ்தவர்கள் சார்பாக இன்னொரு அணியும் உருவெடுத்திருக்கிறது.

நாங்கள் ஏற்கனவே தமிழ் பேசும் மக்களாக இருந்து மதத்தால் பிரிந்திருக்கிறோம். இந்நிலையில் மற்றொரு மதப்பிரிவு ஏற்படுமானால் இந்நாட்டில் இரண்டாவது இனமாக இருக்கும் நாம் நான்காவது, ஐந்தாவது இனமாக இந்துக்களும், தமிழர்களுமாக வந்துவிடுவோம். எனவே, ஆபத்தை உணர்ந்தவர்களாக நாம் மாத்திரமன்றி அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர், வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு உறவினர்களுக்கு உள்ளே பிரிவுகள் ஏற்பட்டு பல கட்சிகள் உருவாகின்ற நிலைமை காணப்படுகின்றது. தயவுசெய்து இவ்வாறான வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

நீங்கள் தேர்தலில் ஈடுபடப்போகின்றீர்களானால் கூறுங்கள் நாங்கள் விலகிக்கொள்கிறோம். ஆனால் புதிது புதிதாக கட்சிகளை உருவாக்கி மக்களைப் பிரித்து எமது இனத்தை சிறு கூறுகளாக்கிவிடாதீர்கள். ஏற்கனவே பௌத்த சிங்கள வாக்குகளை நம்பி ஒரு ஜனாதிபதி வந்திருக்கிறார். அவர் தற்போது தனக்கு பெரும்பான்மையைக் கேட்டு நிற்கின்றார். அவர் சிறுபான்மை இனத்தைப் பற்றிச் சிந்திப்பதாக இல்லை.

இவ்வாறான நிலையில் நாங்கள் மத ரீதியாக பிளவுபட்டு பௌத்த சிங்களம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றார் நாங்கள் இங்கு வாழ்வதா, இல்லையா என்கிற மிகப்பெரிய ஐயப்பாடே உருவாகிவிடும்.

ஆகவே, புதிதாக உருவாகின்ற கட்சிகளும், அதை உருவாக்குபவர்களும் தற்போது உள்ள காலத்தை உணர்ந்து மீண்டும் ஒருமுறை சிந்தித்து செயற்படுங்கள் என்பதை நாங்கள் கோரி நிற்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.