ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில்

6 hjn
6 hjn

போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு வரை குறித்த தீர்மானத்திலிருந்து இலங்கை வெளியேற முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்த நல்லாட்சி அரசாங்கமே குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, “2021 ஆம் ஆண்டு இறுதி வரை குறித்த தீர்மானத்தில் நாங்கள் இணை அனுசரணையாளர்களாக இருக்கிறோம். அதில் இருந்து வெளியேற முடியாது.

2021 க்குப் பின்னரே அடுத்த தீர்மானத்திற்கு நீங்கள் இணை அனுசரணை வழங்குவீர்களா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும்” என கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது 2015 ஆம் ஆண்டில், யு.என்.எச்.ஆர்.சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அதில் பெரிய அளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

இதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணை, அந்த நேரத்தில் இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு முக்கிய படியாக காணப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தாமதித்தமை குறித்து தமிழ் தலைவர்கள் கடும் கவலை வெளியிட்டிருந்த நிலையில் 2017 ல் அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு கோரியது.

அதன்படி கடந்த ஆண்டு, மனித உரிமை மீறல்கள் குறித்து கூறப்படும் நம்பகமான விசாரணையை முன்னெடுக்க இலங்கைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க மனித உரிமைகள் பேரவை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.