தேசியக் கொள்கை இல்லாமல் பயணிக்கும் அரசு

5 L
5 L

தேசியக் கொள்கையொன்று இல்லாமல் பயணிக்கும் அரசாங்கத்தால் நாட்டின் எதிர்காலமே பாதிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “2015ஆம் ஆண்டு நாம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது, நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவையே சந்தித்திருந்தது.

எனினும், 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் ஊடாக நாட்டை முன்னேற்றவும் மக்களுக்கான சலுகைகளை வழங்கவும் நாம் பின்வாங்கவில்லை. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நாம் நிவாரணங்களை வழங்கினோம்.

ஆனால், இன்று ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்தால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். தேசிய கொள்கையொன்று இல்லாமல்தான் இந்த அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் இலங்கையின் எதிர்காலமே பாதிக்கப்படும்.

கடனை பெற்றுக்கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எதுவும் மக்களுக்கு பயனளிக்காது. இதனை மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். சாய்ந்தமருதில் தனியான பிரதேச சபையொன்றை ஸ்தாபித்து, வர்த்தமாணி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டது.

எனினும், அதனை இரண்டே நாட்களில் வாபஸ் பெறுவதாக அரசாங்கம் அறிவித்தது. இவ்வாறு ஒரு தீர்மானத்தைக்கூட உறுதியாக எடுக்க முடியாத அரசாகத் தான் இது காணப்படுகிறது” என மேலும் தெரிவித்தார்.