கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

i3 1
i3 1

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‛கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.எம்.பாஸ்கரன்.

இவர் இதற்கு முன்பு வல்லினம், குற்றம் 23 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். துல்கர் சல்மான் இல்லாவிட்டால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமே வெளிவந்திருக்காது என்கிறார் பாஸ்கரன், அவர் மேலும் கூறியதாவது:

நானும், இயக்குனர் தேசிங் பெரியசாமியும் பல ஆண்டு நண்பர்கள். அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கதையை எழுதும்போதே இதில் துல்கர் சல்மான் நடித்தால் தான் நன்றாக இருக்கும். அவர் நடிக்கவில்லை என்றால் இந்த கதையை விட்டு விடலாம் என்று கூறினார். நானும், அவரும் துல்கரை சந்தித்து கதை சொன்னோம். கதையை கேட்டு உற்சாகமான துல்கர், “ஆனால் எனக்கு வரிசையாக படம் இருக்கிறது. அதை முடித்து விட்டு வரும்வரை உங்களால் காத்திருக்க முடியுமா?” என்றார். அதற்கு ஒப்புக் கொண்டோம் 2 வருடம் வரை காத்திருந்தோம்.

ஒரு நாள் எங்களை அழைத்து படப்பிடிப்புக்கு போகலாமா என்றார். ஆனால் எங்களால் தயாரிப்பாளரை தயார் செய்ய முடியவில்லை என்றோம். சில நாட்களில் அவரே எங்களுக்கு தயாரிப்பாளரையும் கொடுத்தார். பட்ஜெட் பற்றி கவலைப்படாதீங்க, நீங்க நினைச்ச மாதிரி எடுங்க என்றார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கத்தான் முடிவு செய்திருந்தோம். ஆனால் துல்கர் தமிழில் மட்டும் எடுங்கள். மலையாளிகளுக்கு தமிழ் நன்றாக தெரியும், வீண் செலவு வேண்டாம் என்று கூறிவிட்டார். படம் முடிந்த பிறகு படத்தை விற்கவும் அவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். துல்கர் சல்மான் இல்லாவிட்டால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தயாராகி இருக்காது, வெளிவந்திருக்காது. அவரைப்போன்ற ஒரு நிஜ ஹீரோவை பார்த்தில்லை. என்றார்.