கொரோனா தொற்று – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதி

1583325283 download
1583325283 download

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பதுளை அரசினர் வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தந்தை, தாய் மற்றும் அவர்களின் ஏழு வயது மகன் ஆகியோரே மேற்படி சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு விசேட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் மகனுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதும் பெற்றோர் அவரை பதுளை அரசினர் வைத்தியசாலையில் சேர்த்தனர். இதையடுத்து தந்தையும், தாயும் சேர்க்கப்பட்டனர்.

குறித்த மூவரும் தனித்தனியாக விசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இவர்கள் மூவரும் தென்கொரியாவில் வசித்து வந்த இலங்கையர்களாவர். தென்கொரியாவில் கொரோனா நோய் பரவுவதை அடுத்து குறித்த மூவரும் அச்சம் கொண்டு தமது சொந்த நாடான இலங்கையின் பண்டாரவளைப் பகுதியில் அம்பிட்டிய என்ற கிராமத்துக்கு கடந்த 27ஆம் திகதி வருகை தந்துள்ளனர்.

அவர்கள் வந்து சேர்ந்த ஒரு வாரத்தில் மகனுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்தே இம்மூவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இம்மூவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றதா என்று அறியும் வகையில் விசேட வைத்திய நிபுணர்கள் பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் ஏனைய நோயாளர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விசேட மருத்துவ அறையில் சிகிச்சையளிக்கப்படுகின்றது என பதுளை அரசினர் வைத்தியசாலையின் சுகாதாரப் பணிப்பாளர் ரன்ஜித் அமரகோன் தெரிவித்துள்ளார்.