தேர்தலுக்கு பின்பு ’19’ஐ நீக்குவோம் – மகிந்த

mahinda 6
mahinda 6

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களைக்  கட்டுப்படுத்துகின்ற 19ஆவது திருத்தத்தை நீக்குகின்ற புதிய அரசியல் திருத்தத்தைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மிக விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலையும் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுயள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன், நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிடுவதையும் பிரதமர் உறுதிசெய்துள்ளார்.

அத்துடன், மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் பிரதான சந்தேகநபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மிக விரைவில் கைதுசெய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரஸ், அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்துகொண்டனர்.