காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் !!!

IMG 0977
IMG 0977

ஐக்கியநாடுகள் சபையின்  43ஆவது மனித உரிமைகள் கூட்ட  தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும்  தருணத்தில் அங்கு சென்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளால்  ஜெனீவாவில்  கையளிக்கப்படவுள்ள மகஜர் முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் வாசிக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டம் நேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர்   தினமான நேற்றைய தினத்தில் (08) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது .

இறுதிப்போரில் (2009) இராணுவத்திடம் தமது பிள்ளைகளை   கையளித்து, சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட இடமான முல்லைத்தீவில் இப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் “உலகெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளில் தெருவில் கிடந்து அழ வைத்திருக்கிறது இந்த அரசு,  எமது பிள்ளைகள் நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ஒப்படைத்தோம், கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும், ஐநாவின் 43ஆவது கூட்டத் தொடரை விட்டு விலகினால் நீதி மறுக்கப்படுமா?, கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு மரணச்சான்றிதழ் தான் பதில் என்றால் கொலையாளி யார் ? போன்ற வாசகங்களை தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழியிலான பதாதைகளை கையில் ஏந்தி கண்ணீருடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் வாதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமுகமட்ட பிரதிநிதிகள், இளைஞர் யுவதிகள், பொதுமக்கள்  என 500க்கு மேற்பட்டோர் கலந்து கவனயீர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்தினர்.