ரவியின் மறைவிடம் தெரியும் – ரணிலும் கைதுசெய்யப்பட வேண்டும் – ஜே.வி.பி

JVP
JVP

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடிக்கொண்டிருக்கின்றபோது அரசு அவரை மறைத்துவைத்துள்ளது என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“எமக்குக் கிடைத்த தகவல்களின்படி ரவி கருணாநாயக்க அரசின் அதிகாரம் மிக்க அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் மறைந்துள்ளார்.

அரசு பொதுவாக சில சந்தேகநபர்களைக் கைதுசெய்ய அனுமதிப்பதில்லை.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கைது செய்யப்பட வேண்டும்.

எனினும், அவரின் பெயர் இன்னமும் சந்தேகநபர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை” – என்றார்.

ரவி கருணாநாயக்க அரசின் அதிகாரம் மிக்க அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் மறைந்திருக்கின்றார் என்று பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ள போதிலும் அந்த அரசியல்வாதியின் பெயரை அவர் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.