அரசியல் இறக்குமதிகள் : வரமா? சாபமா?

samakaalam 1
samakaalam 1

தேர்தல் வந்தால், வடக்கு கிழக்கிற்கு வெளியில் இருந்து சில அரசியல்வாதிகளை இறக்குமதி செய்கிற வியாபாரப் போக்கு தமிழ் அரசியலில் இன்னும் தொடர்கிறது. இதனால் தமிழ்ச் சமூகம் என்ன நன்மையைதான் பெற்றது என்பதே இங்கே எழுகிற கேள்வி. இந்த இறக்குமதி அரசியலை வைத்து சில அரசியல் கட்சிகள் பெரும் ‘படம் காட்டுவதையும்’ அதையே ஒரு அரசியலாகவும் செய்கின்றன.

தமிழ்த் தேசிய அரசியலில் ஜி.ஜி. பொன்னம்பலம் குடும்பத்தினர் இறக்குமதி அரசியல் ஊடாக நுழைந்தவர்கள். அதாவது கொழும்பை தளமாக கொண்டிருந்த இவர்கள், வடக்கு கிழக்கிற்கு தம்மை ஒரு அரசியல் பிரதிநிதிகளாக இறக்குமதி செய்து கொண்டனர். இது பொன்னம்பலம் காலத்திலிருந்து கஜேந்திரகுமார் காலம் வரை தொடர்கின்றது.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய காலத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் மலையக மக்களின் வெளியேற்றத்திற்கு ஆதரவு வழங்கியதன் மூலம், பாரிய வரலாற்று வடுவை ஏற்படுத்தினார். வடக்கு கிழக்கிலிருந்து தமிழர் பிரதிநிதியாக செல்லக்கூடிய ஒருவர் செய்யத் துணியாத செய்யக்கூடாத வேலையாக அதை இன்றளவும் பார்க்கிறோம். இதுவும் இறக்குமதி அரசியலால் வந்த வினைதான்.

கொழும்பை தளமாக கொண்ட பொன்னம்பலம் குடும்பத்திலிருந்து இரண்டாயிரத்தை அண்டிய காலத்தில் அரசியலுக்கு வந்தவர் திரு கஜேந்திரகுமார். விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் அரசியலுக்கு வந்த அவர் 2012வரை தனது வாழ்விடத்தைக் கூட யாழ்ப்பாணத்திற்கு மாற்ற மனமில்லாமலேயே இருந்தார். அவரால் இந்த மண்ணின் பிரதிநிதியாக முடியவில்லை என்பதுதான் அகில இலங்கை காங்கிரஸின் தோல்விகளுக்கு காரணம்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் திரு. சுமந்திரன் இறக்குமதி செய்யப்பட்டார். முழுக்க முழுக்க கொழும்பில் வளர்ந்து சிங்கள மனநிலையுடன் கொழும்பு மனிதராகவே வாழ்ந்த சுமந்திரன், அரசியலுக்கு இறக்குமதி செய்யப்பட்ட போது, ஈழத்தையே பிடித்து தருகிற ராஜதந்திரி என்ற ‘பில்டப்புக்கள்’ ஒருபுறம், இந்த இறக்குமதி சம்பந்தரின் ராஜதந்திரம் என்ற ‘பில்டப்புக்கள்’ மறுபுறம். ஆனாலும் பத்தாண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவரால் இதுவரையில் எதனையும் செய்ய முடியாது என்பதும் கடந்தகால அரசுக்கு முண்டுகொடுத்து, தமிழர் அரசியலை பின்தள்ள மாத்திரமே முடிந்தது என்பதையும் காலம் மெய்பித்துள்ளது.

இதேவேளை வடக்கின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான க.வி. விக்னேஸ்வரன் அவர்களும் இறக்குமதி அரசியல் ஊடாகவே பயணத்தை தொடங்கினார். எல்லா அரசியல்வாதிகளும் வடக்கு கிழக்கு மனிதர்களாக இருந்து, அரசியலுக்கு வந்த பின்னர் கொழும்பு மனிதர்களாக மாறுவார்கள். அத்துடன் கொழும்பிலும் இந்தியாவிலும் குடியேறுவார்கள். ஆனால் திரு. விக்னேஸ்வரன் அவர்கள் மாத்திரமே, கொழும்பு மனிதராக அரசியலுக்குள் நுழைந்து வடக்கு கிழக்கு குடியாக தன்னை மாற்றியவர்.

வடக்கில் மக்களுடன் மக்களாக வாழ்ந்து அவர்களின் உணர்வுகளுடன் ஒன்றற கலந்து தன்னை அம் மக்களின் மெய்யான தலைவராக மாற்றிக் கொண்டார். வடக்கு கிழக்கு மண்ணுக்கு உண்மையானவராக தன்னை ஆக்கினார். இதனால் அவரை எவர்கள் இறக்குமதி செய்தனரோ, அவர்களே எதிர்க்கத் துவங்கினர். முதலமைச்சர் பதவியில் இருந்தும் பதவி இறக்க முயன்றதும், அதற்கு பொதுமக்கள் பாரிய அலையாக கிளர்ந்து அந்த முயற்சிகள் பொடிப்பொடியாக முறியடிக்கப்பட்டதும் அவரது அரசியல் வாழ்வுக்கும் மக்கள் அபிமானத்திற்குமான சாட்சிகள் ஆகும்.

அது மாத்திரமின்றி இறக்குமதி அரசியல் வரலாற்றில் தமிழர்கள் பெற்ற சிறந்த ஒரு தலைவராக விக்னேஸ்வரன் மாத்திரமே காணப்படுகிறார். இந்த நன்மை ஒன்றை மாத்திரமே வடக்கு கிழக்கு மண் பெற்றிருக்கிறது. இவர் வடக்கு மக்களின் அபிமானத்தை மாத்திரமின்றி, கிழக்கு மக்களின் அபிமானத்தையும் பெற்றதுடன் புலம்பெயர் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் திகழ்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமின்றி, இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்கின்ற ஜனாதிபதிகளும் வடக்கு கிழக்கிற்கு அரசியல்வாதிகளை இறக்குமதி செய்கின்ற வேலைகளில் ஈடுபடுவதுண்டு. இதற்கு அங்கஜன் போன்றவர்களும் எடுத்துக்காட்டு. அதேபோல டக்ளஸ் தேவானந்தாவால் லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சந்திரகுமார், பின்னர் எந்த சம்பந்தமும் இல்லாமல் கிளிநொச்சிக்கும் இறக்குமதியாகிக் கொண்டார். இதைவிட, தமிழ் இன விடுதலைக்காக அரசியல் செய்கின்றோம் என சொல்பவர்கள் செய்யும் இறக்குமதி அரசியல் பெரும் சுயநலன் கொண்டதாக காணப்படுகின்றது.

தற்போது, இலங்கை அரசு சார்பாளராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக இருந்த அம்பிகா சற்குணநாதன் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றார். விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் மாத்திரமின்றி, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு ஆதரவான இவர்களைப் போன்றவர்கள், தமிழ் தேசியத்தின் பெயரால் எப்படி இறக்குமதி செய்யப்படுகின்றனர்? அத்துடன் கொழும்பில் வசிக்கும் மற்றொரு புலி எதிர்ப்பாளரான நளினி என்பவரை மட்டக்களப்பில் களமிறக்க கூட்டமைப்பு முயல்வதாகவும் சொல்லப்படுகின்றது.

பல உன்னத போராளிகளையும் போராளித் தளபதிகளையும் தந்த வடக்கு கிழக்கில் இருந்து, சிறந்த பெண் தலைமைப் போராளிகளை ஈன்ற வடக்கு கிழக்கில் இருந்து அரசியல் பிரதிநிதிகளை தேர்வு செய்ய ஏன் இந்தக் கட்சிகள் மறுக்கின்றன? கொழும்பிலிருந்து இறக்குமதி செய்வது நிச்சயமாக வடக்கு கிழக்கு மக்களுக்கு எதிரான அரசியலுக்காகவே. அரசாங்கம் தொடக்கம், கூட்டமைப்பு போன்ற தமிழ் கட்சிகள் வரை இந்த வியபாரத்திற்காகவே இறக்குமதி அரசியலை செய்கின்றன.

தமிழ்க்குரலுக்காக தாயகன்

( இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம் )