இந்திய இளம் வீராங்கனை இலக்கியா உதவி கோரல்

19 1
19 1

பைக் ரேஸ் விளையாட்டில் சாதித்து வரும் இளம் வீராங்கனை இலக்கியா, தொடர்ந்து சாதனைகள் புரிய, தனக்கு தமிழக அரசு மற்றும் பெருநிறுவனங்கள் உதவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இலக்கியா (23), இளம் வயதில் பைக் ஓட்ட வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர்.

இதற்காக தந்தைக்கு தெரியாமல் அவரது பைக்கை எடுத்து ஓட்டி, அவரிடம் திட்டு வாங்கியதும் உண்டு. என்றாலும், ஆர்வம் குறையாமல் ரேஸில் பங்கேற்க விரும்பினார்.

அதற்கும் வீட்டில் முதலில் எதிர்ப்பு எழுந்தது. உறுதியாக இருந்த இலக்கியாவுக்கு பிறகு பெற்றோர் ஆதரவும், ஊக்கமும் அளித்தனர்.

ஆரம்பத்தில்  யாரிடமும் உரிய பயிற்சி பெறாமல், சமூக  ஊடகங்களின் மூலமாக ரேஸ் தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டார். செலவுகளுக்கு உதவி செய்ய பெற்றோரின் பொருளாதாரம் இடம் தராது என்பதால், படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். அதில் கிடைத்த வருமானத்தின்  உதவியுடன் பைக் பயிற்சியில் ஈடுபட்டார்.

தொடர்முயற்சியின் பலனாக 2017ம் ஆண்டு நடந்த 5 சுற்றுகள் கொண்ட தேசிய அளவிலான ஹோண்டா பைக் ரேசில் 3வது சுற்றில் பங்கேற்றார். ஆனாலும், பங்கேற்றவர்களில் 3வது இடம் பிடித்தார். தொடர்ந்து டிவிஎஸ் பைக் ரேசில் 2018, 2019ம் ஆண்டு களில் சாம்பியன் பட்டியலில் இடம் பிடித்தார்அதுபோல், தேசிய அளவில் 15 போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றார்.

இப்போது சர்வதேச அளவிலான போட்டிகளில்  பங்கேற்பதில் இலக்கியா ஆர்வம் காட்டுகிறார். ஆனால், அதற்கு அவருடைய பொருளாதாரம் உரிய இடம் கொடுக்கவில்லை. இப்போது தனியார் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்யும் இலக்கியா, அஞ்சல்வழி மூலம் பட்டப் படிப்பை தொடர்கிறார்.‘ஆர்வம் காரணமாக பைக் ரேஸில் பங்கேற்றாலும், செலவு களை சமாளிக்க முடியாமல் சிரமப்படுகிறேன்.

ரேஸ் ஓட்டும் போது பைக்கில் ஏதாவது பழுது ஏற்பட்டால் சரிசெய்ய, போட்டி நடக்கும் இடத்துக்கு பைக்கை வண்டிகளில் கொண்டு செல்ல ஆகும் செலவு, எனது ஊதியத்தை விட பலமடங்கு அதிகம். எனவே, எனக்கு பெரிய நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் செய்தால் சர்வதேச அளவில் சாதிக்க முடியும்’ என்று, ரேஸ் புயல் இலக்கியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாதிக்க விரும்பும் இவருக்கு தமிழக அரசு, பெருநிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு ஆகும்.