கொரோனாவால் மரணிப்பவர்களின் இறுதித் தருணங்கள் இதயத்தை எரிக்கிறதே?

corono
corono

இந்த உலகம் வரலாறு தோறும் பேரிடர்களை, பேரழிவுகளை, கொள்ளை நோய்களை சந்தித்தே வந்திருக்கின்றது. நம்முடைய வாழ்க்கை இயற்கைக்கு மாறாக வேகம் எடுக்கும் ஒவ்வொரு தருணங்களிலும், இயற்கை எமக்கு எதிராக திரும்பிக் கொண்டே இருக்கின்றது. இயற்கையின் அற்புதங்களை கருக்கிக் கொண்டு, கொள்ளை நோய்கள் குறித்து முறைப்பாடு செய்கிறோம். இப்போதும்கூட பூமியை அதன் இயல்பில் அணுகத் தவறும் குற்றத்தை ஒப்புக்கொள்ள நாம் தயாரில்லை.

கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க உலகமே முடங்கியிருக்கிறது. உலகின் எல்லா மனிதர்களும் தத்தம் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். சிதறி இருக்கும் மனிதர்கள் ஒன்று சேர்ந்தால்தான் அது சமூகம், அது நாடு, அது உலகம். ஆனால் இன்றைக்கு மனிதர்கள் ஒன்றுகூடக் கூடிய எல்லா இடங்களும் வெறித்தோடிக் காணப்படுகின்றன. மனிதர்களை தனிமைப்படுமாறு அறிவுறுத்துகிறோம். வீட்டுக்குள்ளும் ஒவ்வொருவரின் அறைகளையும் மூடுமாறு சொல்கிறார்கள்.

விலங்குகள்கூட இப்படி வாழ்வதில்லை என்பதுதான் பெருந்துயரமானது. அவைகள் கூட அவ்வளவு எளிதாக ஒன்றை ஒன்று பிரிந்துவிடுவதில்லை. கொரோனாவால் அப்படி ஒரு வாழ்வு சபிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா மருத்துவப் பணியினை மேற்கொண்ட ஒரு மருத்துவர் கூறிய செய்தி, மனித மனத்தை உலுக்குகின்றது. கொரோனால் உயிரிழப்பவர்கள், தமது இறுதித் தருணத்தில்கூட உறவினர்களுடன் பேச முடியாது. அவர்கள் உறவினர்களை, பார்க்கவும் பேசவும் வீடியோ அழைப்பு மாத்திரமே ஒரே வழி. அதன் ஊடாகவே அவர்கள் இறுதியாக விடைபெறலாம்.

இதைப்போல கேரளாவிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. வெளிநாட்டில் பணி புரிந்துவிட்டு நாடு திரும்பிய இளைஞர் ஒருவர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் அவரது தந்தை காலமாகியுள்ளார். தனது தந்தையின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதனை தூரத்தில் நின்று பார்க்க அனுமதிக்கப்பட்டதுடன் வீடியோ அழைப்பிலேயே அவர் தந்தையின் இறுதிக் கிரியையை பார்த்திருக்கிறார்.

இந்த உலகில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு அன்புதான் அடிப்படை. அந்த அன்பைதான் கொரோனா பலியாக்க முனைகின்றது. இந்த நோயினால் அன்பை வெளிப்படுத்த முடியாத தருணங்கள், பிரிந்து போகும் காதலர்கள், தள்ளி நிற்கும் குடும்பங்கள் என்று ஏராளம் துயரங்கள் உலகம் எங்கும் நிகழ்ந்தபடியிருக்கிறது. தொடுதல் என்பதே ஒரு குற்றமாக இப்போது ஆகிவிட்டது. தொடுதலும் ஒரு தொடர்பாடல்தான். வார்த்தைகளைவிடவும் வலிமையான தொடர்பாடல் அது.

தொடுதல் வாயிலாக நாம் அளிக்கக்கூடிய அன்பும் நம்பிக்கையும் பெரியது. இப்போது எவரும் எவருக்கும் இந்த உபகாரத்தை செய்ய முடியவில்லை. பூட் சிட்டிகளிலும் பேருந்து நிலையங்களிலும் ஒருவரை ஒருவர் கண்டால் பேசாமல் விலகிச் செல்கிறார்கள். உணவு விடுதிகளில் இருக்கும் பணியாளர்களின் கண்களில் பீதிதான் நிறைந்திருக்கின்றது. அவர்கள் முன்பு போல அன்பையும் தமது கோப்பைகளில் பரிமாறுவதில்லை. அச்சத்தைதான் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

சீனாவில் தொடங்கிய, கொரோனா தொற்று இப்போது, 110இற்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதுவரையில் இந்த நோயினால் உலகம் எங்கும் 6ஆயிரத்து 600 பேருக்கு மேல் சாவடைந்துள்ளனர். அத்துடன் ஒரு லட்சத்து 75ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. பொது இடங்கள் யாவும் முடங்கிய நிலையில், மதுபானசாலைகளுக்கும் தமிழக அரசு மூடலை அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 28பேர் கொரொனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மரணங்கள் ஏதும் நிகழவில்லை என்பது ஆறுதல். பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருகிறார்கள். பாடசாலைகள் யாவும் மூடப்பட்டிருக்கின்றன. நேற்று 16ஆம் திகதி இலங்கையில் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றிலிருந்து 3 நாட்கள் விடுமுறையாக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை பொறுத்தவரையில், போர்க்காலத்திற்கு ஒப்பான பீதியே நிலவுகின்றது. மக்கள் தமக்கு தேவையான பொருட்களை எல்லாம் கொள்வனவு செய்து கொண்டு வீடுகளுக்குள் முடங்குகிறார்கள். பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்த முடியாமல் உயர்கின்றன. எப்படியேனும் இந்த நெருக்கடியை கடக்க வேண்டும் என்ற தவிப்பில்தான் தமிழர்களின் மண் இருக்கின்றது.

முடங்கியிருக்கும் வேலைகளையும் தடைப்பட்டிருக்கும் கல்வியையும் இணையம் வழியான டிஜிட்டல் புலத்தில் மேற்கொள்ள முடியும். இதுவே துண்டிக்கப்பட்ட இன்றை உலகம் இயங்குவதற்கான ஒரே வெளி. இணைய வழியான செயற்பாடுகள் முடங்கவில்லை. அத்துடன் அன்பையும் மனிதாபிமானத்தையும் இழந்துவிடாமல், சுகாதாரமாகவும் விழிப்புணர்வோடும் உலக சமூகத்துடன் இணைந்து இந்த நெருக்கடியை கடக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமை. இப் பூமி மீண்டு வந்து இயல்போடு இயங்க அனைவரும் பொறுப்போடு செயல்படுவதுடன் அன்போடும் பிரார்த்திப்போம்.

தமிழ்க்குரல் ஆசிரியர்பீடம்.

17.03.2020