அநுராதபுரத்திலிருந்து பத்து அரசியல் கைதிகள் யாழ். சிறைக்கு மாற்றம்!

4 re
4 re

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 13 பேரில் 10 பேர் நேற்றிரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.

இந்தத் தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னக்கோன் நேற்றிரவு தன்னிடம் அறிவித்தார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலதாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கொரோனா வைரஸ் பீதியையடுத்து அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற அசம்பாவிதங்களையடுத்து அங்குள்ள உண்மை நிலையை அறிந்துகொள்ளும் வகையிலும், தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடனும் சிறைச்சாலைக்கு நேற்றுமுன்தினம் நேரடியாகச் சென்றிருந்தேன்.

அங்கு இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பான விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்கள் இடம்பெறுவதால் தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட முடியாது எனச் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் என்னிடம் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் 13  பேருக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பதைத் தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் என்னிடம் கூறினார்.

இதனையடுத்து குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னக்கோனின்  கவனத்துக்குக் கொண்டு சென்று இவ்வாறான அசாதாரண நிலைமைகள் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நாம் நீண்டகாலமாகக் கோருகின்றோம் என்பதை சுட்டிக்காட்டினேன். அதனை ஆராய்வதாகத் தெரிவித்த ஆணையாளர் சிறிது நேரம் தாமதித்து தொடர்புகொண்டு குறித்த கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதற்கமைய நேற்றிரவு என்னைத் தொடர்புகொண்ட அவர், 13 கைதிகளில் 10 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்படுகின்றனர். அவர்களை ஏற்றிய சிறைச்சாலை பஸ் யாழ்ப்பாணம் சிறைச்சாலை நோக்கிப் புறப்பட்டு விட்டது. ஏனைய 3 கைதிகளும் கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளனர் என்று கூறினார்” – என்றார்.