‘கொரோனா’வின் பீதியில் நாடு; இன்று அவசர சர்வகட்சி மாநாடு

2 5
2 5

பாரிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸால் நாடு பீதியடைந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் கூட்டுகின்றார்.

இதற்கான அழைப்பு நேற்று சகல கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று காலை 10 மணியளவில் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டின் தற்போதைய சூழலில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது பேசப்படவுள்ளன.

முக்கியமாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் நாட்டின் அனர்த்த நிலைமையால் அரசுக்குப் பெருமளவு நிதி தேவைப்படுவதால் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசியம் குறித்து இதன்போது கட்சித் தலைவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு நிலைமைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைக்கவுள்ளது.