கொரோனா: நுண் கிருமிகளின் மூன்றாம் உலகப் போரா?

image
image

இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகம் தழுவியதொரு பிரச்சினையாக ஏற்பட்டிருப்பது கொரோனா அச்சுறுத்தலே. இரண்டாம் உலகப் போர் என்பது ஆயுதங்களின் போராகவும் அதிகாரங்களின் போராகவும் உலகை உலுக்கியது. மூன்றாம் உலகப் போர் என்பது நீருக்கான போராகவும் உணவுக்கான பஞ்சப் போராகவும் நடக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நுண்கிருமிகளின் போராகியுள்ளது. 

கொரோனா நுண் கிருமிகளினால் உலகம் முழுவதும் முடங்கி வருகின்றது. சீனாவின் பூஹான் நகரில் தொடங்கிய கொரோனா நுண் கிருமிகளின் யுத்தம், உலகம் எங்கும் வேகமாக பரவி வருகின்றது. ஏற்கனவே, இத்தாலி, பிரான்ஸ், ஈரான், அவுஸ்ரேலியா முதலிய நாடுகள் முற்றாக முடங்கியுள்ள நிலையில் இப்போது பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளும் வீடுகளுக்குள் மக்களை முடங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

வீடுகளுக்குள் ஓய்வெடுக்கத் தவறினால் கல்லறைகளில் ஓய்வெடுக்க வேண்டும் என்று இத்தாலி அரசு மக்களை எச்சரித்துள்ளது. அத்துடன் இலங்கையும் முற்றாக தனது கதவுகளை மூடி மூடியுள்ளது. பண்டார நாயக்கா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இலங்கையின் மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களு்ககு இடையிலான போக்குவரத்துக்கள் முற்றாக தடுக்கப்பட்டு போர்க்காலத்தைப் போல ஊரடங்கு வாழ்க்கையில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையின் அண்டை நாடான இந்தியாவும் அவசரகால நிலமைகளை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவை நாடு முழுவதும் பிறப்பித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கலும் நேற்று முந்தினத்திலிருந்து முடங்கத் துவங்கியது. மக்கள் தமது வீடுகளுக்குள் முடங்கி ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள முடியாது சமூக இடைவெளியை பேண வேண்டும் என அனைத்து நாட்டு அரசுகளும் மக்களை வலியுறுத்தி வருகின்றன. அத்துடன் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுவரையில், கொரோனா நுண் கிருமிகளினால் 16ஆயிரத்து 558பேர் சாவடைந்துள்ளனர். அத்துடன் 3இலட்சத்து 81ஆயிரத்து 761பேர் கொரோனா நுண்கிருமி தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். சீனாவில் 3ஆயிரத்து 277பேர் சாவடைந்த நிலையில், இத்தாலியில் 6ஆயிரத்து 77பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 2ஆயிரத்து 311பேரும் ஈரானில் ஆயிரத்து 812பேரும் பிரான்சில் 861பேரும் மரணித்துள்ளனர். உலகமெங்கும் ஏற்பட்டுள்ள இந்த மரணங்கள் உலக மக்கள் நுண்கிருமிகளினால் ஒரு போரை எதிர்கொண்டுள்ளனர் என உணரச் செய்கின்றது.

இலங்கையில் 96பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இலங்கை போரினாலும் இன அழிப்பினாலும் அதிகம் உயிரிழப்பை சந்தித்த நாடு. இங்கே இறுதிப் போரில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்கள் பலிகொள்ளப்பட்டார்கள். வரலாறு முழுதுமான போரால் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக அதிக உயிரிழப்பையும் வாழ்விழப்பையும் சந்தித்து பெரும் சமூக சிதைவுகளுக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் கொரோனா யுத்தத்தை மிகுந்த அவதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவினால் நாடு முடங்கியுள்ள நிலையில், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தினக்கூலிக் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்பன தமது அன்றாட வாழ்வை நகர்த்த முடியாத நிலையில் உள்ளனர்.

இவர்களுக்கு அரசாங்கம் சரியான வகையில் நிவாரணங்களை அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழ் தலைமைகளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையையும் தகவல்களையும் தமிழ் தலைவர்கள் எடுத்துரைக்க வேண்டும். நாடு முடங்கியுள்ள நிலையில் தமிழ் தலைவர்களும் தம்மை முடக்கிக் கொண்டிராமல், மக்களுக்காக களத்தில் சேவையாற்ற வேண்டும்.

கொரோனாவால் தொழற்சாலைகள் முடங்கியதைப் போல, சந்தைகள் முடங்கியதைப் போல தமிழ் தலைவர்களும் முடங்கிவிடக்கூடாது. தலைவர்கள் எனப்படுபவர்கள், எல்லா அச்சுறுத்தல்களையும் தாண்டி மக்களுக்காக களத்தில் நின்று உரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டதிட்டங்களுக்கு அமைவாக பணியாற்ற வேண்டும். ஒரு சில கட்சி உறுப்பினர்களும் அடிமட்டத் தொண்டர்களும் இப் பணிகளை செய்து முடிக்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து சமூக கூட்டிணைவுடன் இவைகளை செய்ய முன்வரவேண்டும்.

அரசுகள், மக்கள் தலைவர்கள், சமூக நிறுவனங்களின் பணிகளுடன் மக்களும் பொறுப்பாக நடந்து கொள்ளுவதன் வாயிலாகவே கொரோனா நுண்கிருமிகளின் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடாமல், வீடுகளில் பாதுகாப்பாக இருப்பதுடன், இன்றைய சுகாதாரத்திற்கு அவசியமான சமூக இடைவெளியைப் பேணி, சுகாதாரத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். உலக மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடும் பொறுப்பணர்வோடும் நடப்பதுதான் மகத்துவமான மனித உயிர்களை பாதுகாக்க உதவும்.

தமிழ்க்குரல் ஆசிரியர் பீடம்.

24.03.2020