கோயில்கள், தேவாலயங்கள் மக்களுக்கு உதவவேண்டும் – விக்கி வேண்டுகோள்

z p11 Wigneswaran 01
z p11 Wigneswaran 01

மக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் கோயில்கள், தேவாலயங்கள் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

கோயில்கள்,சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் வணக்கத்தலங்கள் அனைத்தினதும் தர்மகர்த்தாக்களிடமும், மதத் தலைவர்களிடமும், வழிபாட்டாளர்களிடமும் ஒரு அன்பானவேண்டுகோள்.

இன்று வணக்கஸ்தலங்களில் நடைபெறவேண்டிய வருடாந்த திருவிழாக்கள், பூஜைகள், ஆராதனைகள், வழிபாடுகள் அனைத்தும் கொரோனாவின் நிமித்தம் ஸ்தம்பிதமாகியுள்ளன. யார் யாரை இந்த வைரஸ் அடுத்துத் தாக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. சமயச் சடங்குகளுக்காகப் பாவிக்க விருந்த நிதியனைத்தும் செலவு செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

அதேநேரம் நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தில் தமது குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய குடும்பத் தலைவர்கள் தலைவிகள் வீட்டுக்கு வெளியே செல்ல முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். பலருக்கு தத்தமது ஊர்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல குடும்பங்கள் அடுத்தவேளை சாப்பாடு எங்கிருந்து கிடைக்கும் என்று ஏங்கிக் கிடக்கின்றனர். பலர் பட்டினியின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு தத்தளித்து வருகின்றனர்.


இந்த காலகட்டத்துக்குத்தான் “மக்கள் சேவை மகேஸ்வரன் சேவை”என்ற முதுமொழி முற்றும் பொருந்துகின்றது. கோயில்களில் திருவிழாக்கள் செய்ய இருந்த உபயகாரர்கள், வணக்கஸ் தலங்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் அறநிலையக் காப்பாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இன்று பட்டினியால் வாடும் பலவறிய குடும்பங்களுக்கு ஓரிரு வாரங்களுக்கேனும் பாவிக்கக்கூடிய உலர் உணவுப் பொதிகளை சமய காரணங்களுக்காக வைத்திருந்த தமது நிதியைப் பாவித்து வாங்கிக் கொடுக்க முன்வரவேண்டும் என்று ஆயிரம் பிறை கண்ட எனது வயதை மட்டுமே எனக்கிருக்குந் தகைமையாக முன்வைத்து அனைத்து அன்புள்ளங்களிடமும் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.


இவ்வாறான ஒரு செயல்பாட்டை சிறப்பாக முன் நடத்த ஊடகங்கள் முன்வரலாம் என்று கருதுகின்றேன். தேவையுடையோரை அவர்கள் அடையாளப்படுத்திக் கொடுக்கலாம். தயவுசெய்து எமது தமிழ் மக்கள் இந்த கைங்கரியத்திலாவது தங்கள் முரண்பாடுகளை முன்வைக்காது முனைந்து வந்து உதவியளிக்க முன்வரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். என்றார்.