நாடளாவிய ரீதியில் கொரோனா பரிசோதனை

y 2
y 2

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாடளாவிய ரீதியிலான பரிசோதனைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வரையிலான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 122 ஆகக் காணப்படுகிறது.

இந்நிலையில் இது வரையான காலப்பகுதியில், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டவர்களிடமும், அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டதன் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடமும் மாத்திரமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இதுவரையில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களிடமும், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடமும் மாத்திரமே பரிசோதனைகளை மேற்கொண்டோம். எனினும் குறித்த வைரஸ் பரவல் சமூக ரீதியாக பரவ ஆரம்பித்துள்ளதா என்பதைப் பரிசோதிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

குறித்த பரிசோதனை நடவடிக்கைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பாகவும் எந்தப் பிரிவினரை இந்நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்பது குறித்தும் ஓர் காணொளி கலந்துரையாடலை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரையிலான காலப்பகுதியில் இலங்கையில் இருவர் உயிரிழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.