ஆப்பிரிக்கா நாடுகளிலும் கொரோனா தாக்குதல்- 5,000 பேருக்கு பாதிப்பு!

3 ff
3 ff

உலகின் வல்லரசுகளை வேட்டையாடி வரும் கொரோனா தொற்று நோய் ஏழ்மை நிறைந்து காணப்படும் ஆப்பிரிக்கா கண்டத்தையும் தாக்கி வருகிறது. தற்போதைய நிலையில் ஆப்பிரிக்கா நாடுகளில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 200ஐ எட்டுகிறது. 5,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து என பேயாட்டம் ஆண்ட கொரோனா இப்போது அமெரிக்காவை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. உலகில் அண்டார்ட்டிக்கா கண்டத்தைத் தவிர அத்தனை கண்டத்து தேசங்களையும் கொரோனா நிலைகுலைய வைத்திருக்கிறது.

இந்த நிலையில் பல்வேறு தொற்று நோய்களாலும் ஆட்கொல்லி நோய்களாலும் பேரழிவை எதிர்கொண்டு வரும் ஆப்பிரிக்காவையும் கொரோனா கொடூரமாக தாக்கி வருகிறது. ஆப்பிரிக்கா நாடுகளில் இதுவரை 174 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சுமார் 5000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 335 பேர் குணமடைந்தும் உள்ளனர். ஆப்பிரிக்கா கண்டத்தில் மொத்தம் 47 நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. 7 நாடுகள் கொரோனாவின் தாக்குதலில் இருந்து விடுவிபட்டுள்ளன. வடக்கு ஆப்பிரிக்காவில் எகிப்தில்தான் மிக அதிகமாக கொரோனாவின் பாதிப்பு இருக்கிறது. அங்கு 656 பேரும் அல்ஜீரியாவில் 584 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக மொரோக்காவில் 556; துனிசியாவில் 362 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

லிபியாவில் 8 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் பர்கின் ஃபாசோவில் 246 பேரும் ஐவரி கோஸ்ட்டில் 168 பேரும் செனகலில் 162, நைஜீரியாவில் 131 பேரும் கொரோனாவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கானாவில் 152 பேர், டோகோவில் 30, நைஜரில் 27, மாலி 25, கினியாவில் 22 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்பிராந்தியத்தில் சியாரா லியோன் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

மத்திய ஆப்பிரிக்காவில் கேமரூனில்தான் அதிகபட்சமாக 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் தென்னாப்பிரிக்காவில்தான் மிக அதிகமாக 1326 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மடகாஸ்கரில் 44 பேரும் ஜாம்பியாவில் 35 பேரும் கொரோனாவின் பிடியில் உள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் மொரீஷியஸில் 128, ருவாண்டாவில் 70 பேர் உகாண்டாவில் 33 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். புரூண்டி, தெற்கு சூடான் நாடுகளில் கொரோனா தாக்கம் இல்லை என தெரியவந்துள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் ஆப்பிரிக்கா நாடுகள் லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றன. ஆனாலும் கொரோனா விஸ்வரூபம் எடுத்தால் அதை எதிர்கொள்ளக் கூடிய வலிமை ஆப்பிரிக்கா நாடுகளில் இல்லை. இதனால் சர்வதேச சமூகம், கொரோனாவால் ஆப்பிரிக்கா எப்படியான பேரழிவை எதிர்கொள்ளுமோ என்கிற பேரச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனமும் இதற்கான முன்னெச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

ஏற்கனவே ஆப்பிரிக்காவை எபோலா தொற்று நோய் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக தாக்கியது. இதில் ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டுமே 11,000 பேர் பலியாகினர். அதேபோல் ஆட்கொல்லி நோயான எய்ட்ஸால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் ஆப்பிரிக்கா நாடுகளில் பலியாகி வருகின்றனர். 2018-ல் மட்டுமே 4,70, 000 பேர் ஆப்பிரிக்கா நாடுகளில் எய்ட்ஸ் எனும் கொள்ளை நோயால் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனா எத்தகைய ருத்ரதாண்டவத்தை காட்டுமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது.