இலங்கையில் 152 பேர் கொரோனாவால் பாதிப்பு!

6 mn
6 mn

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட மேலும் ஒருவர் இன்று இனங்காணப்பட்டுள்ளார். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.சுகாதார அமைச்சு இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இன்று மேலும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரை 24 பேர் பூரண குணமடைந்துள்ளனர். அதேவேளை, இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய 124 பேரும் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, 30 வைத்தியசாலைகளில் 250 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 36 நோயாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக புத்தளம் மாவட்டத்தில் 25 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 24 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 11 பேரும், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 2 பேரும் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

காலி, கேகாலை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களில் 34 பேரும், இலங்கை வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 5 பேரும் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் அதிகமுள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.