சிங்களவர்களுக்கான பரிட்சையில் தமிழ் மக்கள் ஏன் போட்டியிட வேண்டும்? – கரிகாலன்

kari
kari

சிங்கள தேசம் தனக்கான தலைவரை தேடும் தேர்தல் பரிட்சையில் இறங்கிவிட்டது. இதனை தேர்தல் போட்டி என்று கூறாமல் பரிட்சை என்று கூறுவதற்கும் ஒரு தெளிவான காரணமுண்டு. தமிழர்கள்தான் ஜனாதிபதி தேர்தலை ஒரு போட்டியாக கருதுகின்றனர். ஆனால் சிங்கள தேசமோ ஒவ்வொரு முறையும் தான் எதிர்கொண்டிருக்கின்ற புதிய சவால்களை வெற்றிகொள்ளுவதற்கான ஒரு உபாயமாகவே ஜனாதிபதி தேர்தல்களை பயன்படுத்திக்கொள்கின்றது. தங்களுக்கென ஒரு புதிய முகத்தை தெரிவு செய்வதன் ஊடாக, அதுவரை தாங்கள் எதிர்கொண்டுவந்த சவால்கள் அனைத்தையும் ஓரு பாய்ச்சலில் வெற்றிகொள்ளுகின்றது. வெளித்தோற்றத்தில் இது போட்டியாகவே தெரியும் ஆனால் உண்மையில் இது ஒரு போட்டியல்ல மாறாக, ஒரு சிங்கள ஆளும் வர்க்கத்தின் அஞ்சல்ஓட்டப் போட்டி. ஆனால் இந்த அஞ்சல் ஓட்டத்தின் தன்மை, அதன் தீய நோக்கம் எதனையும் விளங்கிக்கொள்ளாது, தமிழ் மக்கள் இந்த சிங்கள பரிட்சையில் பங்குபற்றிவந்திருக்கின்றனர். சிங்களவர்களுக்கான பரிட்சையில் பங்குபற்றுவதால் தமிழ் மக்கள் எவ்வாறு வெற்றிபெற முடியும்? கடந்த பல தசாப்தங்களாக இந்த பரிட்சையில் பங்குபற்றி பின்னர் ஏமாந்து போயிருப்பதே தமிழர் வரலாறு.

தமிழ் மக்கள் நினைத்தால் சிங்கள பரிட்சையின் பெறுபேறுகளை எவ்வாறு தலைகீழாகக் குழப்பலாம் என்பதை தமிழ் மக்கள் ஒரு போதுமே உணர்ந்ததில்லை. தமிழ் ஜனநாயக தலைமைகள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் தலைவர்கள் என்போரும் தமிழ் மக்களின் ஜனநாயக பலம் என்ன என்பதை உணர்த்தும் வகையில் ஒருபோதுமே செயற்பட்டதுமில்லை.

வெறுமனே தங்களின் சுகபோகங்களுக்காகவும். வெளியார் கோபித்துக் கொள்வார்கள் என்றவாறான போலி பிரச்சாரங்களையும் முன்வைத்தும், தமிழ் மக்களை தொடர்ந்தும் இந்த சிங்கள பரிட்சையில் ஈடுபட வைக்கின்றர். சிங்களவர்களுக்கான பரிட்சையில் தமிழ் மக்கள் தேவையற்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர். சிங்கள கட்சிகளில் எந்தக் கட்சி நல்லதென்று விவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டும்தான். அவ்வாறானதொரு முடிவை எடுக்கக்கூடிய வல்லமையும், ஆளுமையும் அப்போதிருந்த தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்தது.

2005இல் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பங்களிப்பதை தவிர்த்த போதுதான், தமிழ் மக்களின் வாக்குகள் எத்தனை சக்திவாய்ந்தது என்னும் உண்மை முதல் முதலாக தமிழ் மக்களுக்குத் தெரிந்தது. சிங்களப் பரிட்சையின் பெறுபேறுகள் முற்றிலும் குழம்பியது.. ரணில் விக்கிரமசிங்க தோல்வியை தழுவினார். இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த அரசியல் நிகழ்சிநிரலும் ஒரு தேர்தல் முடிவால் தலைகீழானது.

விடுதலைப் புலிகளின் தலைமையின் முடிவு என்பது குறிப்பிட்ட சூழ்நிலை கருதி மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவு ஆனால் அந்த முடிவால் தான் தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் ஒரு வல்லமையுள்ள இனம் என்னும் உண்மை வெளியுலகிற்கு தெரியவந்தது. ஆனால் 2009இற்கு பின்னர், பழைய குறுடி கதவைத் திறடி என்பது போல அனைத்தும் தலைகீழானது. 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் தமிழ் மக்கள் இரண்டு தடைவைகள் இந்த சிங்கள பரிட்சையை எழுதியிருக்கின்றனர்.

அதனால் தமிழ் மக்கள் கண்டதென்ன? 2010இல் தமிழ் மக்களை எந்தளவிற்கு ஏமாற்ற முடியுமோ, அந்தளவிற்கு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு, ஏமாற்றியது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வழிநடத்தி, பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்களை காவுகொண்ட, மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வதற்கான சிங்கள பரிட்சையில் தமிழ் மக்கள் தோற்றினர்.

அதனால் தமிழ் மக்களின் தேசிய வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? அன்று தமிழ் மக்களுக்கு முன்னால் சரத்பொன்சேகா என்னும் சிங்களவர் நிறுத்தப்பட்ட போதும், மகிந்தராஜபக்சவை தோற்கடிப்பது என்னும் சிங்கள நிகழ்சிநிரலுக்காகவே தமிழ் வாக்குகள் பயன்படுத்தப்பட்டன. 2015இல் தமிழ் மக்களுக்கு முன்னால் மைத்திரிபால நிறுத்தப்பட்ட போதும், மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தல் என்னும் சிங்கள நிகழ்ச்சிநிரலுக்காகவே தமிழ் வாக்குகள் பயன்படுத்தப்பட்டன.

தோற்பதற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்தனர். இப்போது சிங்களம் மீண்டும் கோத்தபாய, சஜித் பிரேமதாச என்னும் இரண்டு வினாத்தாள்களுடன் புதிய பரிட்சை ஒன்றை ஆரம்பத்திருக்கிறது. மீண்டும் கோத்தபாயவை காண்பித்து, சஜித் நல்லவர் என்னும் மாயையை ஏற்படுத்த சிங்கள ஆளும் வர்க்கம் முயற்சிக்கின்றது. மீண்டும் தமிழ் மக்கள் அதற்கு பலியாகப் போகின்றனரா?

ஏமாற்றப்படப் போகின்றோம் என்று தெரிந்தே இருவரில் ஒருவர் நல்லவர் என்னும் சிங்கள சித்து விளையாட்டுக்குள் சிக்கி நமது மக்கள் ஏமாறப் போகின்றனரா?
கிடைக்கும். இந்த தேர்தலில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களில் எவருமே தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகள் எதனையும் ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. அனைவருமே தாங்கள் கூறப் போகும் விடயங்களை எவ்வாறு சிங்கள மக்கள் புரிந்துகொள்வார்கள். அதனால் தங்களின் சிங்கள வாக்கு வங்கி பாதிப்படைந்துவிடுமா? என்றுதான் சிந்தி;ப்பார்கள். தமிழ் மக்களின் நியாயங்களை ஏற்றுக் கொண்டால் சிங்களவர்கள் கோபித்துவிடுவார்கள் என்று சிந்திக்கும் ஒரு வேட்பாளர் எப்படி தமிழ் மக்களுக்கான சரியான வேட்பாளராக இருக்க முடியும்? இன்று சஜித் பிரேமதாசவை பொறுத்தவரையில், அவர் தமிழ் மக்கள் தொடர்பில் இதுவரை வாயே திறந்ததில்லை. மேலும் தனது தகப்பனாரை விடுதலை புலிகளே கொன்றவர்கள் என்னும் வைராக்கியத்தை மனதில் புதைத்து வைத்திருப்பவர். கோத்தபாய ராஜபக்ச தொடர்பில் சொல்வதேற்கே ஒன்றுமில்லை. இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கென்று ஒரு தேசிய பிரச்சினையே இல்லை என்னும் யுத்த வெற்றி இறுமாப்புக் கொண்டவர்.

ஜே.பி.யின் வேட்பாளர் அனுரகுமார திசாயநாயக்க இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் எச்சமான தற்காலிக வடக்கு-கிழக்கு இணைப்பையே நிரந்தரமாக இல்லாமலாக்க வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்று, அதனை சாதித்தவர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயகம் என்பதை எதிர்க்க வேண்டுமென்பதில் எப்போதுமே உறுதியாக இருக்கும் ஒரு கட்சியே ஜே.வி.பி. இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டுமென்பதில் மகிந்த ராஜபக்சவுடன் தோளோடு தோள்நின்ற கட்சி. இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தில் ஆட் பற்றாக்குறை ஏற்பட்ட போது, சிங்கள கிராமங்கள் தோறும் சென்று இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட கட்சிதான் ஜே.வி.பி. இந்த அடிப்படையில் சிந்தித்தால் இவர்கள் அனைவருமே கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நலன்களை எதிர்த்து நின்றவர்கள். எப்போதும் தமிழ் மக்களை இரண்டாம்தர பிரஜைகளாகவே பார்த்தவர்கள். இவர்களை தமிழ் மக்கள் எப்படி ஆதரிக்க முடியும்? இந்த சிங்கள சித்து விளையாட்டிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கு என்ன வழி? ஒரு வழியும் இல்லையா? தேடினால் வழிகள் நிச்சயம் உண்டு.

இந்தத் தேர்தலை வழிமுறையை பயன்படுத்தி, எவ்வாறு 2005 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்கள நிகழ்சிரலை தலை கீழாக்கியதோ. அவ்வாறு செய்வதற்கான ஆற்றலும் வலுவும் இப்போதும் தமிழ் மக்களிடம் உண்டு.

அதாவது, நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலை முற்றிலுமாக ஒரு தேசமாக எதிர்கொள்ளும் முடிவை நாம் எடுப்போமானால் சிங்களம் போடும் கணக்குகள் அனைத்துமே தலைகீழாகும். வடக்கு கிழக்கிலுள்ள ஒரு தமிழ் மகனும், மகளும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்கமால் விடுவதன் மூலம் இதனை சாதிக்க முடியும். இதனை சாதிப்பதற்கு, தமிழர் தேசத்திற்கென ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தி, அனைத்து தமிழ் மக்களும் அவருக்கு வாக்களிப்பதன் ஊடாக, நாங்கள் ஒரு தேசமாக இருக்கிறோம். நாம் ஒரு போதும் எமது அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை விட்டு விலகப் போவதில்லை என்பதை தென்னிலங்கைக்கும், இலங்கைத் தீவில் தலையீடு செய்துவரும் சர்வதேச சக்திகளுக்கும் ஆணித்தரமாக சொல்ல முடியும். இ;ந்த வழிமுறை முடியாமல் போகுமானால், நமது மக்களுக்கு முன்னாலுள்ள இரண்டாவது, தெரிவு இந்த சிங்கள பரிட்சையிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொள்வதுதான். அதாவது வாக்களிப்பிலிருந்து விலகி நிற்பது. மூன்றாவது தேர்வும் உண்டு. அதாவது வாக்களிப்பிற்கு சென்று தங்களின் வாக்குளை செல்லுபடியற்றதாக்குவது. ஆகச் சிறந்த தெரிவு எங்களுக்கான ஒரு தமிழ் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தி எங்களது தேசிய அபிலாஸைகளை உரத்துக் கூறுவதுதான்.

இதன் மூலம் தெற்காசியாவில் நாம் ஒரு தனியினம். இலங்கைத் தீவின் அரசியல் நிகழ்சிநிரலை மாற்றிமைக்கும் வல்லமை தமிழ் மக்களுக்குண்டு ஏனெனில் நாங்கள் இலங்கைத் தீவில் ஒரு தேசமாக இருக்கிறோம். இதனை முன்வைத்து தமிழ் மக்கள் அவைரும் சிந்திக்க வேண்டியது மிகவும் கட்டாயமான ஒன்று, அத்துடன் இது ஒரு காலம் தேவை. காலத்தை தவற விட்டால் பின்னர் கண்டவரிடமெல்லாம் நாம் அரசியல் யாசகம் செய்ய நேரிடும்.

அதனைத்தான் கடந்த பத்து வருடங்களாக செய்து வருகிறோம். ஆனாலும் இன்னும் வாய்ப்புக்கள் மீண்டும் மீண்டும் எங்களிடம் வராமலில்லை. மீண்டு; ஒரு வரலாற்று வாய்ப்பு எங்களின் முன்னால் இருக்கிறது.

  • கரிகாலன் –