முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 203 பேர் வெளியேற்றம்!

Capture 5
Capture 5

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 203 பேர் அங்கிருந்து வெளியயேறியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய ஸ்ரீலங்கா பிரஜைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் தமது குடும்பத்தாருடன் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் கட்டம் கட்டமாக வெளியேறி வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கேப்பாபுலவு விமானப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்தவர்கள் இன்றைய தினம் வெளியேறியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 203 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பரிசோதகர்களால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் காலை அவர்கள் அங்கிருந்து வெளியேறியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த 203 பேருக்கும் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த குழுவில் ஐந்து பௌத்த மதத் துறவிகளும் ஒரு சிறுவனும் உள்ளடங்கியிருந்தனர்.

இவர்கள் இராணுவத்தினரின் விசேட போருந்துகள் மூலம் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து 217 பேர் வெளியேறவுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுவரை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து மூவாயிரத்து 169 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.