கொரோனாவின் எச்சரிக்கையை புரிந்துகொள்வோமா? – கவிஞர் தீபச்செல்வன்

Theepachchelvan 1
Theepachchelvan 1

உலகமே கொரோனாவால் முடங்கியிருக்கிறது. உலகில் எங்கோ ஒரு மூலையில் மனித அழிவுகள் ஏற்படுகின்ற போது, இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்ற போது, ஏனைய பகுதிகளில் வாழ்கிறவர்கள் அது குறித்து எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் தத்தம் வாழ்வை குறித்தும் பயணங்களை குறித்தும் சிந்தித்தார்கள். அந்தப் போக்கை கொரோனா மாற்றியுள்ளது. இயற்கை மற்றும் மனித சமூகத்திற்கு இடையிலான உறவுகளின் வெளிகளை இந்த இடர்பாட்டுக்காலம் ஒழுங்குபடுத்துகின்றது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இருந்தால் மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதுதான் தீர்வு என்பதே உலகமெங்கும் கைகொள்ளப்படும் நடைமுறை. மனிதர்களற்ற உலகின் நகரங்களிலும் உலகக் கிராமங்களிலும் பறவைகளும் பட்சிகளும் உலாவுகின்றன. உண்மையில் இந்தப் பூமி யாருடையேதோ அவர்கள் இந்தத் தருணத்தில் எடுத்துக்கொள்ளுகிறார்கள். நகரத்தின் கொங்கிறீட் கட்டிடங்களின்மீது அமர்ந்து சோகமாக இருக்கும் பறவைகளும் காபெற் வீதியில் படுத்திருந்து வெறித்துப் பார்க்கும் பட்சிகளும் நமக்கு ஏராளமானவற்றைச் சொல்கின்றன.

நாம் இயற்கைக்கு எதிராக செய்கிற சதிகளின் விளைவுகள்தான் இப் பூமியில் ஏற்படும் அனர்த்தங்கள். நிலம், காடு, கடல், ஆகாயம் என இயற்கை அளித்த பெருங்கொடைகள் ஒவ்வொன்றிலும் மனிதன் ஏற்படுத்துகின்ற அபாய செயற்பாடுகளின் விளைவுகள் பயங்கரமானவை. வரட்சி, சுனாமி, சூறாவளி, நில நடுக்கம் என்று மிகுந்த அபாயங்களை நம்ப முடியாத இயற்கையின் கொடும் புதிர்களை இப் பூவுலக மனிதர்கள் அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். புதிது புதிதான கொள்ளை நோய்கள் மனித உயிர்களை காவு கொண்டு உலகக் கிடங்கில் இப்படித்தான் இருக்கின்றன.

நிலத்தை பெரு விலைக்கு விற்றோம். காடுகளை அழித்து மரங்களை கொன்று சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தினோம். தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் யுகத்திற்குள் மாண்டோம். இப்போது காற்றை கண்டு அஞ்சுகின்ற, காற்றை வாங்கி சுவாசிக்கின்ற யுகத்திற்கும் வந்துவிட்டோம். பல மேலை நாடுகளில் வீடுகளில் காற்று வாங்கி சுவாசிக்கும் வாழ்க்கையும் இயல்பாகிவிட்டது. இலங்கை இந்தியா போன்ற இயற்கை வளம் மிக்க நாடுகளுக்கும் இந்த கலாசாரம் வந்துவிடுமா என்பதே இன்றைய அச்சம்?

கொரோனா மாத்திரமல்ல எல்லாவிதமான தொற்று அபாயங்களில் இருந்தும் மனிதர்கள் மீண்டிருக்க, தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைகள் முன்னூதாரணமாகின்றன. கைலாகு கொடுப்பதை தவிர்த்து ஒருவரை ஒருவர் வணங்கி வணக்கம் செலுத்துகின்ற முறையை நாகரிகமற்ற முறையாக சில தரப்பினர் கருதியதுண்டு. ஆனால் இன்று அதுவே பொருத்தமானதும் ஆரோக்கியமான முறையுமாக பின்பற்றப்படுகின்றது. உலகத் தலைவர்கள் பலரும் இந்த முறையைப் பின்பற்றி ஒருவரை ஒருவர் வணங்கி வணக்கம் செலுத்துகின்றனர்.

அதைப் போல மஞ்சள் தெளித்தல், சாணம் தெளித்தல், வேப்பிலைகளை தொங்க விடுதல், நீராடி வீடுகளுக்குள் செல்லுதல், துடக்கு கழித்தல் போன்ற தமிழர் மரபுச் செயற்பாடுகள் எந்தளவு முக்கியத்துவம் என்பதும் இன்று உணரப்படுகின்றது. இவை பிற்போக்கானவை அல்லது மூட நம்பிக்கை சார்ந்தவை என்று ஒருகாலத்தில் எள்ளி நகையாடப்பட்டன. ஆனால் வாழ்வியலுக்கான அறிவியல் பூர்வான விசயங்கள் இவை என்பனை இன்றைக்கு உணருகின்ற காலம் வந்திருக்கின்றது.

ஆரோக்கியமாக வாழ நிறையுணவை உண்ணுதல், உணவுச் சமநிலையைப் பேணுதல், பாரம்பரிய உணவுகளை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருத்தல் என்பனவும் இப்போது அவசியமாக உணரப்படுகின்றது. அந்திய பண்பாட்டு தாக்கம், உலகமயமாதல் விரிவாக்கம் போன்றவையால் பாரம்பரிய உணவு மற்றும் கலாசார முறைகள் பெரும் வீழ்ச்சியை கண்டன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியற்ற, குறைந்த ஆயுளைக் கொண்ட மனித சமூகம் உருவாகத் தொடங்கியது. இருபது ஆண்டுகளுக்கு முன்னரான – தற்போதைய இறப்பு பிறப்பு விகிதத்தையும் சராசரி ஆயுள் விகிதத்தையும் எடுத்துப் பார்த்தால் இதன் ஆபத்தை உணரலாம்.

எமது முன்னோர்கள் இயற்கையை வழிபட்டனர். இயற்கையை கொண்டாடினர். இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழ்ந்தனர். இதனால் நீண்ட ஆயுளையும் செழிப்பையும் கொண்ட வாழ்வை அனுபவித்து மாபெரும் சாதனையையும் அதிசயங்களையும் செய்தனர். நாமோ இன்று பின்னோக்கி நகர்கிறோம். மனிதர்கள் இயற்கையை புரிந்துகொண்டு அதற்கேற்ப வாழ மறுத்தால் இதுபோன்ற அழிவுகளை இன்னும் சந்திக்க நேரிடும். கொரோனா அபாயத்தை ஒரு அனுபவமாக எச்சரிக்கையாக நாம் புரிந்து கொள்வதுதான் அறிவார்ந்த செயல்.

தமிழ்க்குரலுக்காக கவிஞர் தீபச்செல்வன்