கடைகளுக்குள் புகுந்து பொலிஸார் தடியடி!

2 Batt
2 Batt

மட்டக்களப்பு மாநகர முதல்வரால், பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பழவகைக் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளைத் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதனை மீறி இன்று திறக்கப்பட்ட கடைகளை மாநகர முதல்வர் நேரில் சென்று பூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பொலிஸார் திறக்கப்பட்ட கடைகளுக்குள் இருந்த சனக் கூட்டத்திற்கு தடியடி பிரயோகம் செய்து கடைகளைப் பூட்டவைத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கோடு சன நெரிசலினைக் கட்டுப்படுத்தும் விதமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதியோர வியாபாரங்களுக்கு முற்றுமுழுதாகத் தடைவிதிக்கப்பட்டதுடன் அத்தியவசியப் பொருட்களுக்கான கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டடுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன் நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து மாநகர முதல்வரின் அறிப்பை மீறி மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் துணி வியாபாரக் கடைகள் மற்றும் ஏனைய கடைகள் திறக்கப்பட்டதையடுத்து அங்கு சனக்கூட்டம் சமூக இடைவெளியைப் பேணாது திரண்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் தடியடிப் பிரயோகம் செய்து மாநகர சபை முதல்வரின் அறிவிப்பை மீறி திறக்கப்பட்ட கடைகளை மூடவைத்தனர்.

இதேவேளை, காந்தி பூங்காவிற்கு முன்னாள் உள்ள துணிக் கடைகளுக்குள் பொதுமக்களை உள்வாங்கி வெளிக்கதவுகளை பூட்டி உட்பகுதியில் உடை வியாபாரம் செய்யப்பட்டுவந்த கடைகளுக்குள் மாநகர முதல்வர் உட்புகுந்து பொதுமக்களை வெளியேறவைத்து கடைகளை பூட்டவைத்தார்.

அதேவேளை, மாநகரசபை உத்தியோகத்தர்கள் அறிவிப்பை மீறி வீதியோரங்களில் வியாபாரம் செய்தவர்களின் பொருட்களை எடுத்துச் சென்றுளள்ளனர்.

இந்நிலையில் மக்கள் எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கான உடைகள் வாங்குவதில் ஆர்வங்காட்டி வருவதை காணக்கூடியதாக இருந்ததுடன் செங்கலடி, ஏறாவூர் பிரதேசங்களில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளிகள் எதுவும் பேணப்படாமல் முண்டியடித்துக்கொண்டு பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர்.

இதேவேளை, பொதுமக்கள் கூடும் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.