தேசிய நிகழ்வுகளை கட்சி நிகழ்வாக்கும் இழிவரசியல்

arasiyal
arasiyal

தமிழர்களின் மண்ணில் இடம்பெறும் தேசிய நிகழ்வுகள், தமிழர்களின் பண்பாடு ஆகிவிட்டன. மாவீரர் நாள் தொடங்கி, தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாள், அன்னை பூபதி அவர்களின் நினைவு நாள், கப்டன் மில்லரின் நினைவு நாள் என்று வருடம் முழுவதும் தேச விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்களை அனுஷ்டிப்பது தாயகத்தின் வழக்கமும் பண்பாடும் ஆகும். 2009இற்குப் பின்னர், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அதன் வரலாறுகளையும் மாத்திரமின்றி, மாவீரர்களின் நினைவு நாட்களையும் கட்சி அரசியலுக்கு பயன்படுத்தும் இழிவரசியல் நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், மாவீரர் நாட்கள் உள்ளிட்ட தேசிய நிகழ்வுகள் யாவுமே பொது இடங்களிலேயே நடாத்தப்பட்டுள்ளன. பொது மக்களும் போராளிகளும் அனுஷ்டிக்கும் இத் தேசிய நிகழ்வுகள் விடுதலைப் புலிகளின் பாசறைகளில் இடம்பெறுவதில்லை. அங்கு போராளிகளுக்கு மாத்திரமான நிகழ்வுகளே இடம்பெறும். மாவீரர் பொது மண்டபங்கள், சனசமூக நிலையங்கள், மைதானங்களின் அமைக்கப்பட்ட பொது மண்டபங்கள் போன்று மக்கள் இயல்பாக கூடக்கூடிய இடங்களில் இன உணர்வு எழிச்சி பெற போராளிகளின் வழிகாட்டலில் மக்கள் அமைப்புகளால் இந்த நிகழ்வுகள் . முழுவதும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே நிகழ்வுகள் இடம்பெறும் .காரணம் இந்த பெரும்போர் மக்களுக்காகவே நடந்தது அவர்களின் உணர்வுகளே அந்த இடத்துக்கு முக்கியமானதுன புலிகள் சரியான புரிந்துணர்வை கொண்டிருந்தனர் .

2009ஆம் ஆண்டுக்கு இற்குப் பின்னர், மக்கள் தமிழ் தேசிய நினைவு நாட்கள் எல்லாவற்றையும் தவறாமல் நினைவு கொள்கின்றனர். அது மாத்திரமல்ல, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொது நிறுவனங்கள் பலவற்றிலும் தேசிய நிகழ்வுகள் கொண்டாப்படுகின்றன. இதனால் அவர்கள் பல்வேறு இராணுவ நெருக்கடிகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அது மாத்திரமின்றி மக்கள் பெரும் நெருக்கடிகளின் மத்தியில் தமது பிள்ளைகளுக்கு அஞ்சலியை செலுத்தியுள்ளனர். இந்தக் காலத்தில் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது அலுவலகங்களில் தேசிய நினைவு நாட்களை நடத்தியுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இலங்கையில் நெகிழ்வான அரு அரசியல் போக்கு காணப்பட்டது. இந்தக் காலத்தில்தான் மாவீரர் நாள் கொண்டாடக்கூடிய சூழலும் நாட்டில் ஏற்பட்டது. மக்கள் தன்னெழுச்சியாக மாவீரர் இல்லங்களை துப்புரவு செய்து கடந்த மூன்று ஆண்டுகளாக மாவீரர்களை நினைவு கூர்ந்து வருகின்றார்கள். மாவீரர் நாளை கொண்டாடுவதையும், தேசிய நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதையும் கட்சி நிகழ்வுகளாக்கும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன.

அண்மையில், தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாட்கள் வந்தன. கடந்த ஆண்டு யாழ் மாநகர சபை முதல்வர் தியாக தீபத்திற்கு நினைவுத் தூபி அமைப்பதாக அறிவித்தபோதும் இன்றுவரையில் அது நடக்கவில்லை. அந்த அறிவிப்பும் அவரது பதவிக்கும் கட்சிக்கும் விளம்பரமாகதான் இருந்ததே தவிர, காரியம் நடக்கவில்லை. தியாக தீபத்தின் நினைவுத் தூபியிலும் நினைவு நாட்களிலும் சில கட்சிகள் மோதி அரசியல் செய்யப் பாக்கின்றன. வவுனியாவில் இருந்து நடை பவனி ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இளைஞர்கள் கலந்துகொள்ளவில்லை என்று முன்னணியினர் கவலை தெரிவித்தார்கள்.

அதற்கு காரணம் அந்தக் கட்சியே. அவர்கள் தமது கட்சிக்கும் நடை பவனிக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிக் கொண்டு, தமது கட்சிப் பெயரை அந்த நடைபவனியில் விளம்பரம் செய்தார்கள். அது மாத்திரமல்ல, பெரும்பாலான தேசிய நிகழ்வுகளிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களிலும் தமது கட்சி பெயர் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியிருப்பது முன்னணியின் வழக்கமாகிவிட்டது. அத்துடன் அந்த நடைபவனியின்போது முன்னணியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் அரசியல் விளம்பரத்தில் ஈடுபட்டார்கள். இதனால் தாயக இளைஞர்களுக்கு அந்த நடைபவனியில் ஈடுபாடு வரவில்லை. நினைவு தினங்களை நாம் செய்கின்றோம் என்பதை முன்னிறுத்துவதை மட்டுமே முன்னணியினர் தமது தேசிய கொள்கை என நினைக்கின்றனர் போலும் ,மகளின் தமது விடிவுக்காக தம் உயிர்களை கொடுத்தவர்களுக்கு மக்கள் தன்னிச்சையாக சென்று தமது ஆத்மார்த்தமான அஞ்சலியை செலுத்த கட்சிகள் இடம்கொடுக்காதது மக்கள் மனதை பெரிதும் காயப்படுத்தி இருக்கிறது .
சென்ற வருடம் தியாதீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் சென்று மேலே ஏறாதே கீழே இறங்கு இது புனிதமான இடம் என கட்சியின் சிறுசுகள் ஆர்ப்பரித்ததை பெரியவர்கள் அதாவது திலீபனோடு பேசிப் பழகியவர்கள் அவர் இறப்பை கண்முன் பார்த்து கதிகலங்கி போனவர்கள் வாயடைத்துபோய் வெளியே வந்து சொல்லி மனமுடைந்த சம்பவம் யாவரும் அறிந்ததே .

இதைப்போல மற்றொரு சம்பவம் கிளிநொச்சியில் நடந்துள்ளது. கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் வேலைகளை செய்வதற்காக பணிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. தற்போது புதிய பணிக்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லம் என்பது பொதுவான இடம். அங்கே அனைத்து மக்களும் திரண்டு தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி தமது மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற இடம்.

எனவே மாவீரர் துயிலும் இல்ல பொதுப் பணிக்குழு ஒன்றை அமைப்பதாக இருந்தால் பகிரங்கமாக அழைத்து அனைத்து மக்களின் பிரதிநிதிகளும் அதில் தேர்வு செய்யப்படவேண்டும். ஒரு கட்சி உறுப்பினர்களை கொண்டு குழு அமைப்பதும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அதிகாரத்திற்குள் வைத்திருப்பது தேசிய நிகழ்ச்சிகளை குறுகிய எல்லைக்குள் அடக்கும்

கடந்த காலத்தில் மாவீரர் நாளில் துயிலும் இல்லத்தில் சில அரசியல்வாதிகள் விளக்கேற்றி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார்கள். அதன் பின்னர் அவர்கள் அந்த இடத்தை நெருங்குவதில்லை. மக்களே அவற்றை முன்னெடுக்கின்றனர். மாவீரர் குடும்பங்கள், அவர்களின் பிள்ளைகள், உரித்துடையவர்களிடம் இத்தகைய நிகழ்வுகளை கையளிப்பதே சரியான அணுகுமுறை என்பதே பலரதும் கருத்து.

தேசிய நிகழ்வுகளின் போது கட்சிகள் பின்னால் ஒதுங்கி நிற்பதே நல்லது. மக்கள் அவற்றை முன்னெடுப்பார்கள். மக்களின் கைகளில் இதனை ஒப்படைக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படி கட்சி உறுப்பினர்களை வைத்து பணிக்குழு அமைக்கும் வேலைகள் நடக்குமா? இன்று தமிழ் கட்சிகள் எல்லாமே தமது வாக்கு வங்கிகளை இலக்கு வைத்தே செயற்படுகின்றன. மாவீரர் துயிலும் இல்லத்தில் தமது ஆதிகத்தை காட்டி, வாக்கு வேட்டையில் ஈடுபடுவது இழிவரசியல் ஆகும்.

தமிழ்க் குரலுக்காக தாயகன்