தமிழ்மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவே ஒன்றிணைவு – சுரேஷ்

Suresh
Suresh

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இணைந்துள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுரேஸ் பிரேமசந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது முடிவுகளை ஒரே குரலில் வெளிகொண்டுவர வேண்டுமென்பதற்காகவே 6 கட்சிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

மேலும் பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியினாலேயே நாங்கள் ஒன்றாக இணைந்து கலந்துரையாடி, ஆவணமொன்றை வெளியிட்டோம். இந்த ஆவணத்தில் 5 கட்சிகள் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளன.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை உரிய முறையில் முன்வைக்க வேண்டுமென்ற நோக்கில்தான் இந்த கூட்டு முயற்சி உருவாக்கப்பட்டது.

அத்துடன் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களை சந்திக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில ஊடகங்களை பொறுத்தவரை, இது நிரந்தரமான கூட்டா அல்லது எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டா போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.

நாங்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இணைந்துள்ளோம்.

யாருக்கு வாக்களிப்பது அல்லது வாக்களிக்காமல் விடுவதா என்பதை ஒரே குரலில் வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

அந்தவகையில் தென் இலங்கையை பொறுத்தவரையில் எம்மால் வெளியிடப்பட்ட ஆவணத்துக்கு காரசாரமான எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள இனவாத சக்திகள் ஆகியவற்றினாலேயே எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்றன.

இதேவேளை யாழிற்கு வருகை தந்திருந்த பிரதமரிடம் இவ்விடயம் குறித்து பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கி தருமாறு கோரியுள்ளோம்.

அவரும் அதற்கு முன்வந்துள்ளார். இதனடிப்படையில் நாம் சந்திப்பை பிரதமருடன் மேற்கொள்ளும்போது, நாங்கள் முன்வைத்த கோரிக்கையில் எதனை நிறைவேற்றுவதற்கு முன்வருவார்கள் என்பதை தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

ஏனைய தரப்புகளும் பேசுவதாக இருந்தாலும் கூட அவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை விரைவாக பூர்த்தி செய்துகொண்டு மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டுமென அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளது.

எனவே, அதற்கான செயற்பாடுகளையே தற்போது முன்னெடுத்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.