சந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கில் அபிவிருத்திஇல்லை – நாமல்

namal 1
namal 1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மன்னார் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மன்னார் நகர மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரித்து கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அனைத்து வாக்கெடுப்புக்களிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டார்கள் எனவும் தமிழ் மக்களுடைய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கோ அல்லது மக்களைப் பற்றி சிந்திப்பதற்கோ அவர்கள் நடுநிலையானவர்களாக இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “வன்னி பிரதேசத்தைச் சேர்ந்த மக்களாகிய நீங்கள் கடந்த காலங்களில் பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்துள்ளீர்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி அமைந்தது.

அவரின் ஆட்சியில் வன்னி பிரதேசத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கின்ற போது வன்னியில் இருக்கின்றவர்கள் தமிழர்களா சிங்களவர்களா என்று பார்க்காது முழு வன்னிக்குமே அபிவிருத்தி திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் கடந்த 4 ½ வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கத்திலே இருக்கின்ற அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு தேவையானவர்களுக்கும், குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்கும் மாத்திரமே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தனர். வேலை வாய்ப்புக்களை வழங்கினாலும் அவர்களுடைய சமூதாயத்திற்கே வழங்குகின்றனர்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களை திரும்பிப் பார்ப்பதாக இல்லை. எனவே இந்நிலையை மாற்றுவதங்கு எமக்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு கோட்டபாய ராஜபக்ஷ தான்.

இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் தவற விடுவோமாக இருந்தால் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ், சிங்கள மக்களின் அபிவிருத்திகளை நாம் எந்த ஒரு காலத்திலும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

அவரின் வெற்றியின் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் அமைக்கப்படுகின்ற அரசாங்கத்தில் மன்னார் பிரதேசத்தில் கத்தோலிக்க மற்றும் இந்து கிராமங்கள் துரிதகதியில் அபிவிருத்தி செய்யப்படும்.

எதிர்வரும் தேர்தலில் உங்களுடைய முழுமையான ஆதரவை தந்து உதவுங்கள். நலமான எதிர்காலம் அனைவருக்கும் அமையட்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.