தமிழ்க் கட்சிகளின் கூட்டிணைவு மக்களை ஏமாற்றும் நாடகம்- டக்ளஸ் குற்றச்சாட்டு

daglas 1
daglas 1

தமிழ்க் கட்சிகளின் கூட்டிணைவு பொது உன்பாடானது மக்களை ஏமாற்றும் கபட நாடகம் எனத் தெரிவித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா அடங்கிப் போயிருக்கும் இனவாதத்தை தூண்டும் வகையிலையே தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் அமைவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அங்குள்ள மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராடுகின்றனர். அந்த மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஆக மக்களின் நலன்களைப் பாதிக்கும் வகையிலும் இங்குள்ள வளங்களைச் சுரண்டும் வகையிலும் செயற்படுவது தான் அபிவிருத்தியாக காட்டப்படுகிறது.

உண்மையில் அபிவிருத்தி என்றால் மக்கள் நலன்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். அதே நேரம் வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இதற்கு மாறான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே அந்த மக்களுக்கு சரியான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமானது. அதனைச் செய்யாமல் அபிவிருத்தி என்று சொல்வது பயனற்றது என்பதுடன் மக்களை ஏமாற்றும் நாடகமாகவே பார்க்கப்படும்.

மேலும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொது நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் ஐந்து தமிழ்க்கட்சிகள் இணங்கியுள்ளதாகவும் அந்தக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் பேசப்படுகிறது. இவ்வாறு இந்த ஐந்த கட்சிகளும் இணக்கம் கண்டு தயாரித்துள்ள பொது நிலைப்பாட்டுக் கோரிக்கைகளை பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்காத நிலையில் இதனை ஏற்ககக் கூடிய வேட்பாளராக தமிழ்க் கட்சியின் வேட்பாளரான எம்.கே. சிவாஜிலிங்கமே இருக்கின்றார். ஆகையினால் இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில் பிரதான வேட்பாளர்கள் யாரும் இந்தக் கோரிக்கைகளை ஏற்க மாட்டார்கள் எனத் தெரிந்தும் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைப்பதென்பது ஒரு பயனற்ற செயற்பாடாகவே பார்க்கிறோம்.

ஆகவே எதை எந்த நேரத்தில் எப்படிச் செய்ய வேண்டுமென்பதை உணர்ந்து செயற்பட வேண்டியதே அவசியமானது. அதற்கான அனுகுமுறைகளும் தெளிவானதாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்க்கட்சிகளின் செயற்பாடுகளும் அவர்களின் அனுகுமுறைகளும் முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கின்றது. உண்மையில் இத்தகைய செயற்பாடுகள் என்பது தங்களுடைய நலன்களை முன்னிறுத்தியதாக இவர்கள் செயற்பாடுவதாகவே நாங்கள் பார்க்கிறோம்.

குறிப்பாக இன்றைக்கு இந்த ஐந்து தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக தெற்கில் பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. இது குறித்து பலரும் இனவாத ரீதியாக பலவிதமான கருத்தக்களை தெரிவித்து வருகின்றனர். ஆக மொதத்ததில் அடங்கிப் போயிருக்கின்ற இனவாதத்தை தூண்டுகின்ற செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கின்றதாகவே அவர்களின் செயற்பாடுகளும் அமைகின்றன.

இவை அனைத்தையும் தங்களது செல்வாக்கை அதிகரிப்பதற்கும் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்குமாகவே தமிழ் தலைமைகள் செய்கின்றன. அவர்களின் அனுகுமுறைகள் என்பது ஒரு போதும் சாத்தியப்படாத அனுகுமுறைகளாகவே இருக்கின்றன. அதற்காகவே இனவாதத்தைத் தூண்டி அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அடுத்த பொதுத்தேர்தலில் தாங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து கூட்டமைப்பு உள்ளிட்ட சில தரப்புக்களின் ஆதரவைப் பெற்று புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி இனப்பிரச்சனைக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதானது அரசியலுக்காகக் சொல்லப்படும் கதைகளாகவே பார்க்கிறோம். இந்தக் கதைகள் என்பது தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதையே நோக்கமாகக் கொண்டவை. ஆகவே மக்கள் தான் இந்த மாற்று வித்தைகள் தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டுமென்றார்.