5 கட்சிகளின் 13 அம்ச கோரிக்கை – பிரதமர் ரணில் சஜித்துடன் விரைவில் பேச்சு

suresh
suresh

பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து 5 கட்சிகள் கையெழுத்திட்ட கேரிக்கை ஆவணத்துடன் ஓரிரு நாட்களுக்குள் கூட்டாக இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

குறித்த பேச்சுவாத்தையில் கோரிக்கை ஆவணத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் இறுக்கமாக பேசி தீர்மானம் எடுக்கப்படும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரமேமச் சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கட்டப்பிராய் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் இன்று நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் தமது முடிவுகளை ஒரே குரலிலும், ஒரு முகத்துடனும் வெளிக் கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்களின் முயட்சியால் 6 கட்சிகள் கூடிப் பேசி, அதில் 5 கட்சிகள் கையெழுத்திட்டு ஒரு ஆவணம் வெளிப்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் என்ற அடிப்படையிலும், அதில் தமிழ் மக்களின் கோரிக்கையை முன்வைப்பது என்ற அடிப்படையிலும் தான் இந்த கூட்டு முயட்சி உருவாக்கப்பட்டது. இப்பொழுது சம்மந்தப்பட்ட வேட்பாளர்களை சந்திப்பதற்கான முயட்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால் சில ஊடகங்களை பொறுத்தவரையில், இது ஒரு நிரந்தரமான கூட்டா, அல்லது எதிர்வரும் பாராளுமன்றத்திற்கான கூட்டா என்பது தொடர்பான கேள்விகளை எழுப்பிகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னர் விட்ட தவறுகளை எல்லாம் திருத்திவிட்டதா என்பது போன்ற பல்வேறு பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.

தென்னிலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள இனவாத சக்திகளாலும் இந்த கூட்டுத் தொடர்பிலும், அது முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பிலும் காரசாரமான எதிர்க்கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றது.

நேற்று முன்தினம் விமான நிலைய திறப்பு விழாவிற்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு பட்ட தரப்பினர்களை சந்தித்து பேசியிருந்தார். எங்களையும் அவர் சந்திக்க விரும்பியதன் காரணமாக அவரை சந்தித்திருந்தோம்.

கூட்டாக இணைந்து பிரதமரை சந்திப்பதற்கான திகதியை ஒதிக்கித்தருமாறு நாங்கள் கோரியுள்ளோம். ஓரிரு நாட்களுக்குள் சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருவதாக எமக்கு கூறப்பட்டுள்ளது.

பிரதமருடன் நாங்கள் கூட்டாக பேசும் பட்சத்தில், ஏற்கனவே எங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக . இறுக்கமாக பேசுவோம். இப் பேச்சுவாத்தையில் நாங்கள் முன்வைக்கும் விடயங்களில் எதனை பிரதமர் தரப்பினர் செய்வதற்கு தயாராக உள்ளார்கள் என்பதை அறிய முடியும். இல்லாவிட்டால் வேறு தரப்புடன் பேசுவது தொடர்பிலும் விரைவாக முடிவினை எடுக்க முடியும்.

இது ஒரு நிரந்தரமான கூட்டு இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே பல விடயங்களில் மக்கள் கொடுத்த ஆணையை மீறி நடந்துள்ளார்கள் என்பதும், அரசாங்கத்தை பல விடயங்களில் காப்பாற்றும் முயட்சிகளை மேற்கொண்டார்களே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் கூட்டமைப்பு சரியான கவனத்தினை செலுத்த வில்லை என்ற பல குற்றச்சாட்டுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் உள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் கூட்டமைப்பின் மீது இருக்கும் நிலையில்தான் தமிழ் மக்களின் நன்மை கருதி ஜனாதிபதி தேர்தலில் சில விடங்களை பேசி பெற்றுக் கொள்வதற்காகத்தான் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை தெளிவாக கூறிவைத்துக் கொள்ளுகின்றேன்.

ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது, இந்த தீர்மானங்களுக்கு அப்பால் வடக்கு மாகாணத்தில் சிங்கள இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் கூட பெருமளவான சிங்கள இளைஞர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். மின்சாரதுறை, வனலாக துறை போன்றவற்றிலும் சிங்கள இளைஞர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

ஆனால் தமிழ் இளைஞர் யுவதிகள், பட்டங்கள் பெற்ற பின்பு கூட வேலை இல்லாமல் உள்ளதை பிரதமரிடத்தில் கூட்டிக்காட்டியுள்ளோம். காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், காணிகளை இழந்தவர்கள் விடயத்தில் அரசு அக்கறை இன்றி செயற்படுகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்கள் தற்போது யாருக்கு வாக்களித்தும் எதுவும் நடக்கப் போவதில்லை என்ற மனோ நிலையில் உள்ளார்கள் என்பதையும் பிரதமருக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.

மிக விரைவாக 5 கட்சிகளும் இணைந்து வகுத்துள்ள கோரிக்கையையின் அடிப்படையில் சந்தித்து பேசுவோம். தமிழரசு கட்சி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் இருந்து தாங்கள் அரசுடன் இணைந்து வருவதாக கூறியிருக்கின்றார்கள். இப்பொழுது மட்டுமல்ல பல காலமாக அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் கூட்டமைப்பினர் இணைந்து செயற்படுவதாக கூறுகின்றார்கள்.

பிரதமர், ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருக்கும் சூழ்நிலையில் கூட்டமைப்பினர் அவர்களுடன் இணைந்து நிகழ்வுகளில் கலந்து கொண்டு, தமது ஆதரவினை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்கி வந்துள்ளார்கள்.

அண்மையில் கூட வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சிவமோகன் ஆகியோர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்கள்.

கூட்டமைப்பினர் தாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இவ்வாறான நடவடிக்கைகளையும், பேச்சுக்கனையும் இப்போது அல்ல ஆரம்பத்தில் இருந்தே பேசி வருகின்றார்கள்.

இவ்வாறு இருக்கையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டாக இணைந்து கொண்டு, கோரிக்கை பத்திரத்தில் கையெழுத்திட்டது.

கூட்டமைப்போ அல்லது தமிழரசு கட்சியோ கொண்டுள்ள கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நாங்கள் அவர்களுடன் இணைந்து கொள்ளவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பினர் தொடர்ந்தும் ஆளுட் கட்சிகளுடன் இணைந்து தங்களை இணங்காட்டிக் கொள்ளுகின்ற அல்லது பங்குதாரர்களாக இருக்கும், அரசை பாதுகாக்கும் விடயத்தில் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நல்ல ஒரு முடிவு எடுப்பார்கள். இறுதியாக மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டா இது ஒரு போதும் அமையாது என்றார்.