முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம்

president 1
president 1

தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை ஒன்று இதுவரையில் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பதுடன், முன்பள்ளி கல்வியை முறைமைப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் முதன்முறையாக இந்த தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆளுநர்கள், மாகாண தலைமைச் செயலாளர்களுக்குமிடையே நேற்று (Oct.18) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேசிய கல்வி ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு ஒன்றின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு நூல்களை ஆராய்ந்து சிறு பராய அபிவிருத்தியுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்கள், அமைப்புக்களின் கருத்துக்கள் முன்மொழிவுகளை பெற்று இந்த கொள்கை தயாரிக்கும் பணிகள் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

பிள்ளைகளின் வாழ்வில் தீர்க்கமான கட்டமான சிறுபராய அபிவிருத்திக்காக முதன்முறையாக தேசிய கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறித்து இதன்போது அனைத்து மாகாண ஆளுநர்களும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

மாகாண மட்டத்தில் நிலவும் கல்வி மற்றும் சுகாதார பிரச்சினைகள் மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேற்படி கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து கொள்கை சார்ந்த தீர்மானங்களுக்கு வருவதற்காக அமைச்சரவை கூட்டத்தின்போது அனைத்து ஆளுநர்களையும் பங்குபற்ற செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)