கோத்தபாயவை கைது செய்ய பரிந்துரைத்தது நானே – வசந்த நவரத்ன பண்டார!

gotabaya
gotabaya

காலி துறைமுகத்தில் 3000 இற்கும் அதிகமான கனரக ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட எவன்கார்ட் மெரிடைம்ஸ் சேர்விசர்ஸ் நிறுவனத்தின் எம்.வி.மஹநுவர ஆயுதக் கப்பல் விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலரும் தற்போதைய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தானே அப்போதைய சட்ட மா அதிபர் யுவஞ்சன விஜேதிலகவுக்கு அறிக்கை ஊடாக பரிந்துரைத்ததாக முன்னாள் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார தெரிவித்தார்.

குறித்த ஆயுத கப்பல் விவகாரம் தொடர்பிலான நடவடிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அப்போதைய குற்றவியல் பிரிவு பொறுப்பாளர் சொலிசிட்டர் ஜெனரால் சுகந்த கம்பலத்தினால் தன்னிடமே ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் கோத்தாபய உள்ளிட்ட ஐவரை அப்போது கைது செய்ய தான் சட்ட மா அதிபருக்கு பரிந்துரைத்ததாகவும் அப் பரிந்துரையின் பின்னர் குறித்த கோவை மீள தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை எனவும் அதனால் குறித்த ஐவரும் கைது செய்யப்படாமை தொடர்பில் முதுகெலும்புள்ள முன்னாள் சட்ட மா அதிபர் எனில் யுவஞ்சன விஜேதிலக நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கோத்தா உள்ளிட்டோரைக் கைது செய்ய தான் அப்போது கொடுத்த பரிந்துரை, சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சிலரது அதிருப்திக்கு உள்ளானதால், அப்போதைய சட்ட மா அதிபரால் தனது பரிந்துரைகளை ஆராய, தற்போதைய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, தற்போதைய மேன் முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோதாகொட, முன்னாள் பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்ன ஆகியோரைக் கொண்ட சிறப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர்களும் அப்போது தனது பரிந்துரைகளுடன் உடன்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார சுட்டிக்காட்டினார்.

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரால் சுகந்த கம்லத் ஆகியோர் இருவேறு பத்திரிகைகளுக்கு வழங்கியிருந்த நேர்காணல்களில் குறிப்பிடப்பட்டுள்ள எவன்கார்ட் விவகார விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியே ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.