2015இன் பின்னரே தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது – பிரதமர் ரணில்

ranil
ranil

தமிழ் மக்களின் பாதுகாப்பு 2015 ஆம் ஆண்டின் பின்னரே உறுதிப்படுத்தப்பட்டது என சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுத்திப்படுத்தும், தேர்தல் பிரசார கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (Nov.04) நடைபெற்ற வேளையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

“கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் சொல்கின்றார்கள், அவர்கள் வெற்றிபெற்றால் பிள்ளையானை முதலமைச்சராக்குவோம் என்று.

நாங்கள் எல்லாப் பதவிகளையும் முஸ்லிம்களுக்கு வழங்கப்போகின்றோம். அதனால் கிழக்கு முதலமைச்சர் பதவியை பிள்ளையானுக்கு வழங்கப்போகின்றோம் என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கு முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு உரிமை இருக்கின்றது. அதே உரிமை முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இருக்கின்றது.

இறுதியாக தமிழ், முஸ்லிம், சிங்களம் என்பதைவிட வேலைசெய்யக்கூடிய முதலமைச்சர்தான் தேவை. தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமாக இருந்தால் அதனை தமிழர்கள்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர அதனை கோத்தாபய ராஜபக்ஷ தெரிவுசெய்ய முடியாது.

ராஜபக்ஷவினர் இப்போது தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுவதற்கு மிகவும் விருப்பப்படுகின்றார்கள். அப்படியானால் தமிழில் தேசிய கீத்ததை பாடுவதற்கு நாங்கள் வழிவகை செய்தபோது ஏன் அதனை எதிர்த்தீர்கள்?

எதிர்வரும் 16ஆம் திகதி அன்னப்பறவை சின்னத்துக்கு சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கினால் தமிழ் மக்களின் உரிமைக்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும். அத்துடன் சுதந்திரத்தைப் பாதுகாத்து இந்தப்பகுதியை அபிவிருத்தி செய்யவேண்டும்.

வரும் காலத்தில் விவசாயத்தை நவீனமயப்படுத்தவுள்ளோம். நெல்லுற்பத்தியை அதிகரிக்க உதவிசெய்வோம். மீன்பிடித் துறையை நாங்கள் நவீனமயப்படுத்துவோம். புதிய படகுகளை வழங்குவோம். மீன்பிடி மற்றும் விவசாயத்தையும் அபிவிருத்தி செய்ய தனியார் துறைகளின் ஆதரவுடன் குளிர்சாதன களஞ்சிய வசதிகளை உருவாக்குவோம். கப்பல் துறையிலே மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் இடையில் ஒரு வர்த்தக நிலையத்தை உருவாக்கவுள்ளோம்.

புதிய பொருளாதாரத்தை இப்பகுதிக்கு வழங்குவோம். மட்டக்களப்பிலே தற்போது விமான நிலையம் செயற்படுகின்றது. இந்தியாவின் சென்னையிலிருந்து மட்டக்களப்புக்கு விமானங்கள் வரும். மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு விமானங்கள் செல்லக்கூடியதாக இருக்கும். 2 விமான நிறுவனங்கள் சேவையிர் ஈடுபடவுள்ளன. சுற்றுலாத்துறையினர் இங்கு வருகை தருவார்கள். அதிகமான தொழில்வாய்ப்புக்கள் உருவாகும். இதனூடாக சகல துறையினருக்கும் தொழில்வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இவ்வாறு பல பாரிய அபிவிருத்தித் திட்டத்தை கொண்டுவருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வேலைத் திட்டங்களை முன்கொண்டு செல்வோம். எனவே நவம்பர் 16ஆம் திகதி அன்னப்பறவைக்கு நேரே புள்ளடியிட்டு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கி அந்த வேலைத் திட்டங்களை நாங்கள் ஆரம்பிப்போம்” என அவர் தெரிவித்தார்.