முஸ்லிம் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதன் காரணமாகவே ஏப்ரல் 21 தாக்குதல்- சந்திரிகா

Chandrika Kumaratunga 1
Chandrika Kumaratunga 1

கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் முஸ்லிம் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குத் தள்ளப்பட்டார்கள் என சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் குழுவினரின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இந்த உண்மையை வெளிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2013 ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதும், முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் தீக்கிரையாக்கப்பட்டதும் முஸ்லிம்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அரசாங்கத்திடம் முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க முடியாது எனக் கருதியதனாலேயே தாம் ஆயுதத்தை நாடினோம் என கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த அரசாங்கத்திலும் துரதிஸ்டவசமாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் இடம்பெற்றன. இருப்பினும், அவற்றின் பின்னால் இருந்தவர்கள் யார் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இது தொடர்பிலான விசாரணைகள் நடைபெறுகின்றன. இந்த சம்பவங்கள் இடம்பெற்றபோது பொறுப்பாக இருந்தவர்களுக்கு நான் எனது குற்றச்சாட்டை முன்வைக்கின்றேன்.

எதிர்பார்ப்புக்கள் மறுக்கப்படும் இளைஞர்கள் அதற்கு எதிராக எழும்போது அந்த சக்தி பாரிய அழிவை ஏற்படுத்தும் என ஒரு அறிஞர் கூறியிருந்ததை இந்த இடத்தில் ஞாபக மூட்டுகின்றேன். வடக்கில் தமிழ் மக்களையும் ஆயுதம் ஏந்த வைத்த சம்பங்கள் இவ்வாறு தான் அமைந்திருந்தன. இப்போது முஸ்லிம் இளைஞர்கள் சிலருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.