தமிழரசுக்கட்சியின் தனித்த முடிவிற்கு சிவமோகன் விளக்கம்

Dr.Sivamohan
Dr.Sivamohan

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவினை தமிழரசுக்கட்சி தனித்து வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தனித்து முடிவெடுத்தமை தொடர்பில் தமிழரசுக்கட்சியின் மீது பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

குறித்த விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கின்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் வவுனியாவில் இன்று (Nov.07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக பாராளுமன்றில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சகல பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து ஆலோசித்து சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பது என்ற ஒரு முடிவை எடுத்திருந்தோம்.

ஆனால் இந்த முடிவை உடனே அறிவிப்பதில்லை என்றும் இன்னும் ஒரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர் தனது விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை என்பதால் அவர் வெளியிட்ட பின்னர் முடிவை அறிவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனத்தைத் தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சி தனது ஆதரவை அறிவித்தது. ஆனால் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர்தான் என்ன தீர்மானம் எடுத்தோம் என்ற வரைபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிடுவதென்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படியே நாம் செல்கின்றோமே தவிர எவரையும் தவிர்த்துவிட்டு முடிவெடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.