கூட்டமைப்பினரின் முடிவு தவறானது- ஆனந்த சங்கரி

aanantha sangari
aanantha sangari

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவினை தெரிவித்தமையானது தவறு எனவும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் எனவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (Nov.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

கூட்டமைப்பினர் தமது வாகன சலுகைகளிற்காகவும் தமது சுயநலனிற்காகவும் இவ்வாறு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர், தமிழ் மக்களின் நலன் சார்ந்து இவர்கள் செயற்படவில்லை, தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இன்றும் காணப்படும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவ்வாறு தமது ஆதரவினை ஒரு தரப்பிற்கு வழங்கினார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறான முடிவு எடுப்பார்கள் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றே. ஆரம்பத்தில் ரெலோவே முடிவினை எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் பின்னர்தான் தமது முடிவினை தெரிவித்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி மாத்திரம் இன்றும் அதே நிலைப்பாட்டில்உள்ளது.

அவர்கள் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்பார்கள் என்று நம்புகின்றேன். எமது கட்சி இன்றுவரை எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

அவ்வாறு ஆதரவினை கொடுப்பதானால், எதையாவது பெற்று தருவோம் என தெரிவிக்கும் நீங்கள் எதற்காக சமஸ்டி கோரினீர்கள்? எதற்காக தனிநாடு கோரினீர்கள்? ஒரு சந்தர்ப்பத்தில் சமஸ்டியை முன்னிலைப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்கும் வகையில் வீடு வீடாக சென்று வாக்களிக்க வேண்டாம் என்று கூறினீர்கள். இன்று மீண்டும் எதற்காக வாக்களிக்க கோருகின்றீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

எனவே இவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு சிறந்த பாடம் ஒன்றை எமது மக்கள் புகட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.