ஜனாதிபதிக்கு அரசியல் கைதியின் பிள்ளையின் கடிதம்

ddddddddddddddddd 1
ddddddddddddddddd 1

ஜனாதிபதித் தாத்தாவுக்கு!

தாத்தா, என்னை உங்களுக்கு நினைவிருக்க நியாயமில்லை. ஆனால், நான் உங்களை நினைவில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் நினைப்பது போல் பரீட்சைக்காகக் கேட்பார்கள் என்பதற்காகவல்ல, எனது தந்தையை விடுவிக்கும் திறப்பு உங்கள் கைகளில்தான் உள்ளது என்பதற்காகத்தான் தாத்தா.

ஆம்…! தாத்தா நான் ஓர் கைதியின் பிள்ளை. ஆனால், எனது அப்பா குற்றங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் அல்லர் தாத்தா. எங்கள் இனத்தின் விடுதலைக்குப் போராடியவர்களுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைதானவர். அதற்காக அவர்

ஆனால், “அப்பா தன் கடமையை இனத்துக்காகச் செய்தார்”, என்றே அம்மா கூறுகிறார். கடமையை செய்தவருக்கே இத்தனை கொடிய தண்டனையா? தாத்தா. அப்படியானால், தாத்தா எங்கள் வீட்டின் கடமையை செய்யாதவர்கள் எல்லாம் சுதந்திரமாகத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறார் தாத்தா.

அந்தப் பொல்லாத தாத்தாவை பிரதமராக்கியபோது எனக்குள் கோபம் எழுந்தது. அந்தப் பொல்லாத தாத்தாதான் என் அப்பா சிறையிலிருக்கிறார். அந்தப் பொல்லாத தாத்தாவின் தம்பிதானாம் தாத்தா இப்போது நீங்கள் இருக்கும் பதவிக்காகப் போட்டி போடுகிறாராம். அந்தத் தாத்தா பொல்லாத தாத்தாவிலும் பார்க்க பொல்லாதவராம் என்று அம்மம்மாவும் பக்கத்து வீட்டு அம்மம்மாவும் பேசுகிறார்கள் தாத்தா.

அவர் இனி உங்கள் பதவிக்கு வந்தால், என் அப்பாவை இனி எப்போதுமே விடமாட்டாராம் என்றும் அப்பம்மா சொல்கிறா தாத்தா. நீங்கள் பதவியில் இருப்பதுகூட இன்னும் ஒரு வாரம்தானாமே. இனி வருபவர்களையும் நம்ப முடியாது. எனவே எனது அப்பாவை விட்டுவிடுங்கள். எனது அப்பாவை மட்டுமல்ல சங்கீதாவின் அப்பாவையும் சிறையிலிருக்கும் மற்றவர்களையும்தான் விட்டுவிடுங்கள் தாத்தா.

யார் அந்த சங்கீதா என்று கேட்டாலும் கேட்பீர்கள். அவளுடைய அப்பாவும் எனது அப்பாவைப் போன்ற அரசியல் கைதிதான். அவளது அம்மாவும் இறந்துவிட்டார். அம்மாவின் மரணத்துக்கு வந்த அவளது அப்பாவுடன் சிறை பஸ்ஸில் ஏறிய கதையை அம்மம்மாவுக்கு பக்கத்து வீட்டு அம்மம்மா சொன்னபோது எனக்கு அழுகை பீறிட்டது தாத்தா.

வருடப் பிறப்புக்கு அவரை விட்டுவிடுவீர்களாம் என்றபோது எனது அப்பாவை விடுவித்தது போல சந்தோசப்பட்டேன் தாத்தா. ஆனால் நீங்கள் அவரை விடவேயில்லையாமே தாத்தா. நீங்கள் சொன்னபிறகு தமிழ், ஆங்கிலம் என மூன்று வருடப் பிறப்புகள் பிறந்தும்  ஏன் தாத்தா நீங்கள் அவரை விடவில்லை.

தாத்தா, நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் தோற்றிருந்தால் பொல்லாத தாத்தாக்கள் உங்களை கொன்றிருப்பார்கள் என்று சொன்னீர்களாமே. தமிழர்கள்தான் வாக்குகளால் உங்களைக் காப்பாற்றினார்கள் என்றும் குறிப்பிட்டீர்களாமே. ஆனால் உங்களைக் காப்பாற்றிய எங்களுக்கு ஏன் தாத்தா எந்த உதவியும் செய்கிறீர்கள் இல்லை.

பக்கத்து வீட்டு அன்ரி காணாமல் ஆக்கப்பட்ட தன் தம்பிக்காக ஒவ்வொருநாளும் அழுகிறார். போராட்டங்களிலும் பங்கேற்கிறார். ஆனால் அவருக்கும்கூட ஏன் இன்னமும் ஒரு பதிலை நீங்கள் சொல்லவில்லை. பலரும் பலவிதமாக கதைக்கிறார்கள். ஆனாலும், நான் மட்டும் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பினேன் தாத்தா. ஆனாலும் அந்த நம்பிக்கைகள் எல்லாம் தகர்வதுபோல் தெரிகிறது தாத்தா.

பத்திரிகை படிக்கும் பழக்கம் எனக்கு அவ்வளவாக இல்லை. ஆனாலும் ஒவ்வொருநாளும் பார்த்து விடுவேன். அதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான் தாத்தா. ஒன்று என் அப்பாவை நீங்கள் விடுவிப்பதாக அறிவிக்கும் செய்தி இன்றாவது வந்துவிடாத என்ற ஏக்கம். அதில் வரும் கேலிச் சித்திரங்கள். அதிலும் உங்களை கேலிச் சித்திரங்களில் பார்ப்பதில் மிகுந்த விருப்பமுண்டு. அந்தக் கேலிச்சித்திரங்கள் மட்டும்தான்.

அதில் உங்களைக் கீறி வரும்போது மகிழ்ச்சியாகவே இருக்கும். பெரும்பாலும் உங்களின் படங்கள்தான் அடிக்கடி வருகின்றன. அந்தப் படங்களை எல்லாம் வெட்டி எனது அறையில் ஒட்டி வைத்திருக்கிறேன். எனக்கு உங்களைப் பிடிக்கக் காரணம் ஒன்றே ஒன்றுதான் எனது அப்பாவை நீங்கள் விடுவித்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கைதான். ஆனாலும், தாத்தா இன்னும் நீங்கள் சாதிக்கும் கள்ளமௌனத்தைப் பார்க்கும்போதும் – உங்கள் பதவி இன்னமும் ஒரு வாரமே என்பதை அறியும்போதும் அந்த நம்பிக்கைகள் மேலும் சிதைகின்றன.

இதனால் தாத்தா, இப்போதெல்லாம் அந்தக் கேலிசித்திரங்களைப் பார்க்கும்போது நீங்கள் என்னைப் பார்த்து  கேலியாக சிரிப்பதாகவே தெரிகிறது. ஆனாலும் தாத்தா நான் நம்பிக்கையுடன் பத்திரிகைகளைப் பார்க்கிறேன். எனது அப்பாவை நீங்கள் விடுவித்து விட்டீர்கள் என்ற செய்தியை படிப்பதற்காக….!

இப்படிக்கு
அரசியல் கைதியின் பிள்ளை