ஜனாதிபதி தேர்தல்: சாதுரியமும் தந்திரோபாயமுமே தமிழர்களைக் காப்பாற்றும்!

ddddddddddddddddd 2
ddddddddddddddddd 2

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ளது. தேர்தல் பிரசாரங்களும் சூடுபிடித்து விட்டன. தனது ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்காது இழுத்தடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட்டாகவும் – தனித்தனியாகவும் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டது. ஆனாலும் இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் வழக்கம்போல ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வமோ – அக்கறையோ கொள்வதில்லை என்பது வழமைதான். இதற்கு, வெற்றி பெறுபவர்கள் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க முன்வருவதில்லை என்பது மட்டுமல்ல, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், தமிழர் பூமி விகாரைகள் அமைத்தல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், தமிழர் பிரதேச வளங்கள் அழிப்பு எனப் பல முக்கிய பிரச்சினைகளுக்குக்கூட அவர்கள் தீர்வு தரத் தயாராக இல்லை என்பதும்தான்.  மீறி இவ்விடயங்களில் அவர்கள்  வாக்குறுதிகளை வழங்கினாலும்கூட அவற்றை நிறைவேற்றுவதும் இல்லை – நிறைவேற எதிர்க்கட்சிகளோ மகாநாயக்க தேரர்களோ அனுமதிக்கப்போவதுமில்லை.

இது கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் பிரச்சினையன்று. 1980 களில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை அறிமுகமானது தொடக்கம் தொடர்வதுதான். சிங்கள – பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நாட்டில் தமிழ் பேசும் ஒருவர் அல்லது சிறுபான்மை மதத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியாது என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது. அதுமட்டுமில்லை, மாறி மாறி ஜனாதிபதி பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மை இனங்களை – அதிலும் குறிப்பாகத் தமிழர்களை எவ்வாறு அடக்கி ஆளலாம் என்பதைப் பற்றியே அதிகம் சிந்தித்தார்கள்.

தமிழர்களுக்கு எதிராக முதலில் இனவாத நெருப்பைப் பற்ற வைத்தவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபக தலைவர் ஆர். டபிள்யூ. பண்டாரநாயக்க இந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றி வளர்த்தவர்கள் டட்லி சேனநாயக்க, ஜே.  ஆர். ஜெயவர்த்தன போன்ற ஐக்கிய தேசியக் கட்சியினர். தமிழர்களுக்கு எதிராகப் போரைத் தொடக்கியவர்களும் இவர்கள்தான். இவர்களின் பின்வந்த ஐ.தே.கவினரும் சுதந்திரக் கட்சியினரும் தமிழர்களுக்கு யார் கூடுதலான அழிவை ஏற்படுத்தினார்கள் எனக் கூறியே ஆட்சியைப் பிடித்தார்கள்.

தமிழர்களின் – சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியப்பட்டபோது விடுதலைப் புலிகள் காலத்தில் “சமாதானம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி வேஷம் தரித்தார்கள். தங்கள் அலுவல் முடிந்ததும் போர் சன்னதம் கொண்டு ஆடினார்கள். இவ்வாறான நாடகங்களால் – ஏமாற்றுக்களால் அப்போது தமிழர்களின் பலமான சக்தியாக இருந்த புலிகள் தேர்தல் புறக்கணிப்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள்.

இப்போதும் – விடுதலைப் புலிகள் மௌனித்த பின்னரும்கூட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் புறக்கணிப்பு என்ற கோஷத்தை முன்னெடுத்து வருகின்றது. விட்டுக் கொடுப்புக்கு இடமில்லாத அதிதீவிர தமிழ்த் தேசியம் என்ற கோட்பாட்டைப் பின்பற்றும் இந்தக் கட்சி, 2010, 2015 தேர்தல்களின்போதும் புறக்கணிப்புக் கோஷத்தையே முன்வைத்தது.  தேர்தலைப் புறக்கணிக்க விடுதலைப் புலிகள் கோரியபோது அவர்களிடம் ஒரு பலம் இருந்தது. அதன் மூலம் தமிழர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்த்து விட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. தமிழர்களின் ஏகோபித்த முடிவை சர்வதேசத்துக்கு உணர்த்தவும் – ஆதரவு திரட்டவும் வழியிருந்தது. ஆனால், இவை எதுவுமே இப்போது தமிழர்களிடம் இல்லை. இன்றைய நிலையில் தமிழர்கள், “வரும் முன் காப்போம்” என்ற சிந்தனையைப் பின்பற்றலாமே தவிர, வந்தபின் தடுக்கலாம் என்ற நிலையில் சிந்திக்க முடியாது. எனவே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் புறக்கணிப்பு என்பது முட்டாள்தனமான – ஆபத்தான வழிமுறையாகும்.

தேர்தல் புறக்கணிப்பு போன்று இன்னொரு முட்டாள்தனத்துக்கும் தமிழினம் இடம்கொடுக்கத் தயாராக இருந்தது. திருநெல்வேலி ஒப்பந்தத்துக்கு முன்பாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை பொதுவேட்பாளர் என தமிழர் ஒருவரை நிறுத்த முற்பட்டது. அதற்கான பேச்சுக்களில் ஒரு குழு ஈடுபடுத்தப்பட்டது. அரசியல் முதிர்ச்சியற்ற – ஆன்மீகத் துறையினர் அதிகம் கொண்டவர்கள் இந்தக் குழுவினரால் பொதுவேட்பாளர் என்ற கோட்பாட்டின் கீழ் வேறு கட்சிகளை இணைக்க முடியவில்லை. அதற்குள் வேட்புமனுத் தாக்கலும் முடிவுக்கு வந்துவிட்டது. இந்நிலையில்தான் திருநெல்வேலி ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஜனாதிபதி தேர்தல் குறித்து சாத்தியமான வழிகள் ஆராயப்பட்டன. ஆனால், அதுவும் பிசுபிசுத்துப் போனது. இதற்கு ஐந்து கட்சிகளுமே உள்ளொன்று வைத்துப் புறமொன்று நடந்தமையே காரணம்.

இந்நிலையில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம். கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் குதித்தார். பொதுவேட்பளாரை நிறுத்தும் விடயத்தில் தோல்வி கண்டவர்கள் அவரை ஆதரிக்கும் முடிவுக்கு வந்தார்கள். இப்போது தமிழர் தாயகத்தில்  தமிழருக்கே உங்கள் ஆதரவு என்ற கோஷம் பலமாக முன்னெடுக்கப்படுகிறது. இதனை தமிழர்கள் குறிப்பாக – வடக்குத் தமிழர்களில் குறித்தளவு தொகையினர் சாதகமாகவே பார்க்கின்றனர். தமிழருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களை ஒருபோதும் தமிழர்கள் தங்கள் தலைமைகளாக ஏற்க மாட்டார்கள். சிங்களத் தலைமைகள் மீது தமிழர்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை என்ற செய்தியை முழுநாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் உணர்த்த முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், தமிழர்கள் அல்லது சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக இவருக்கு ஆதரவை வழங்கினாலும் கூட அவரால் ஜனாதிபதியாக முடியாது. இது போட்டியிடும் வேட்பாளரான சிவாஜிலிங்கத்துக்கும் – அவருக்கு ஆதரவு வழங்குவோருக்கும் நன்கு தெரியும். ஒட்டுமொத்த தமிழர்களும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்தால் மட்டுமே தமிழ்த் தலைமையையே தமிழர்கள் விரும்புகிறார்கள் என்ற செய்தியை முழுநாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் கூற முடியும்… இது சாத்தியமானதா? மேலும், இந்தச் செய்தி கூறப்படுவதால்ஏற்படப்போகும் மாற்றம்தான் என்ன? இது சரியானதாக – சாணக்கியமானதாக இருக்கும் என்றால் விடுதலைப் புலிகள் தேர்தல் புறக்கணிப்பு என்ற விடயத்தையே கையில் எடுத்திருக்கவே மாட்டார்களே. இது நாட்டின் ஜனாதிபதியை – தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலே தவிர கருத்துக்கணிப்பு அல்ல. இதன் மூலம் தமிழர்கள் செய்தியைச் சொல்ல முடியுமே தவிர எதையும் அடைய முடியாது. ஆனால், இன்றையளவில் இந்த முடிவு தமிழர்களை ஆபத்தில் தள்ளவிடும் வாய்ப்பே அதிகம் உள்ளது.

இப்போது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் தென்னிலங்கையில் சரிக்குச் சமமாக வாக்கு வங்கிகளை உடையவர்கள். பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ச சிங்கள- பௌத்தம் என்ற அதிதீவிர இனவாதி. இவரின் சகோதரரான மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது தமிழர்களுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தியவர் இவரே. தமிழர்கள் மீது இனவழிப்பை கட்டவிழ்த்து விட்டவர், தமிழ் இளைஞர், யுவதிகள் மீது சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள், ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் எனப் பல மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு இவரே பொறுப்பாளி.

மற்றைய வேட்பாளர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ. இவரும் கோட்டாபயவுக்கு சளைக்காத தீவிர சிங்கள – பௌத்தரே. இவரின் தந்தையும் தமிழர்களை இரத்தம் சிந்த வைத்தவர்தான். தமிழின அழிப்பில் இவர் பங்கேற்காத போதும் இவரின் கட்சி கோட்டாவுக்கு சற்றும் சளைக்காத குற்றங்களை செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டபோது – அழிவுகளும் அவலங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டபோது இவர் எமக்காக எந்தக் குரலையும் எழுப்பவில்லை. மீறிக் குரல் எழுப்பியிருந்தால் இப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமளவு சக்தி மிக்க தலைவராக வளர்ந்திருக்க மாட்டார் என்பது வேறு.

இந்நிலையில்தான் இந்த இருவரும் இப்போது சிறுபான்மையினரை – தமிழர்களின் வாக்குகளை நாடி வந்திருக்கிறார்கள். இப்போது தேர்தலில் தமிழர்களின் வகிபங்கு என்பது மிகப்பெரியது. ஏனெனில் கடந்த 2015 தேர்தலைப் போன்று, யார் வெற்றியாளர் என்பதைத் தீர்மானிக்கப் போவது தமிழர்களின் – சிறுபான்மையினரின் வாக்குகளே. கடந்த தேர்தலில், பொதுச் சின்னமான அன்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவும் தமிழர்களுக்கு வாக்குறுதிகளை அள்ளிவீசினார். தமிழ்த் தலைமைகளுக்கும் அவருக்கு ஆதரவை வழங்கினர். தமிழ் மக்களும் பேராதரவை வழங்கினார். ஆனால் அவர் இறுதியில் தமிழ் மக்களை ஏமாற்றியது மட்டுமே மிச்சம். இது இன்று நேற்றல்ல பல காலமாகத் தொடர்வதுதான்.

இதேபோன்று இம்முறையும் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவும் வாக்குறுதிகளை அள்ளிவீசுகிறார். அவருக்கு தமிழ்த் தலைமைகளும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால், விரக்தி நிலையில் இருக்கும் பெருமளவு தமிழ் மக்கள் யார் மீதும் ஆர்வம் கொள்ளவில்லை. இதனால் கடந்த காலங்களைப் போன்று வாக்களிப்பு குறைவாகவே இருக்கும். அதையும் மீறி வாக்களிப்பவர்களில் ஒருபகுதியினர் தமிழருக்கு வாக்களிக்கவும் வாய்ப்பு உள்ளது. தமிழர்கள் வாக்களிப்பு கடமையில் இருந்தும் – அதிபுத்திசாலித்தனமாக தமிழருக்கே வாக்களிப்பேன் என்றும் சிந்தித்தால் அதுவே எம்மை சிங்கத்தின் வாயில் தலையைக் கொடுத்தவர்களாக்கி விடும். ஏனெனில் தமிழர்கள் யார் வரக்கூடாது என்று விரும்புகிறார்களோ அவரின் கைகளில் ஆட்சி சென்றுவிடும்.

இவ்வாறு நடந்தால், முள்ளிவாய்க்காலில் கூடி, எமது உறவுகளுக்காக ஒரு துளி கண்ணீர் விட்டழவும் – எங்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகளைப் பேணுவதற்குக்கூட நாதியற்ற இனமாகி விடுவோம். மேலும், இது அரசியலமைப்பு மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்னெடுத்துள்ள முயற்சிகளையும் நிறுத்திவிடும் ஆபத்து உள்ளது. அது மட்டுமின்றி நிச்சயமற்ற தீர்வு நோக்கி புதிய அரசியலமைப்பு முயற்சிகளை மீள ஆரம்பிக்கவும் வழிகோலிவிடும். தவிர, அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர்களுக்கு ஆதவரான எந்த ஒரு விடயத்தையும் பகிரங்கப்படுத்தக்கூடிய காலம் இதுவல்ல என்பது தமிழ்த் தலைமைகளின் நிலைப்பாடு. மீறி பகிரங்கப்படுத்தப் படுமானால் தமிழ்த் தலைமைகள் ஆதரிக்கும் கட்சியின் வேட்பாளர் நிச்சயம் தென்னிலங்கை தோற்கடிக்கப்படுவது நிச்சயம்.  முள்ளின் மேல் விழுந்த சேலையை எடுக்க பொறுமை மட்டுமல்ல தந்திரமும் அவசியம். அதுபோல தமிழர்கள் தந்திரோபாயம் மூலமே சில விடயங்களுக்கேனும் தீர்வைப் பெற முடியும்.

எனவே தமிழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு, தமிழருக்கு ஆதரவு என்ற விஷப் பரீட்சையைத் தவிர்த்து தந்திரோபாயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இல்லையேல், தமிழர்கள் விரும்பாத – தமிழினத்துக்கு ஆபத்தான ஒருவர் ஜனாதிபதியாக நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டவர்களாகி விடுவோம். எனவே சாதுரியமாக சிந்திப்போம்… தந்திரோபாயமாக நடப்போம்…!