தமிழ் தலைமைகளுக்கு மக்கள் வழிகாட்டுகின்றனரா?

ddddddddddddddddd 3
ddddddddddddddddd 3


அண்மைய நாட்களில் தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகின்றது. தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (உண்மையில் முன்னணியை அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்றுதான் அழைக்க வேண்டும்) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கிறார்கள். அதுதான் அந்தப் புகைப்படம். கடந்த காலத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காகவோ, அல்லது இன எழுச்சி சம்பந்தமான விடயங்களுக்காகவோ, இவ்வாறு முன்னணியினர் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கவில்லை.

தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற முன்னணியினரின் பிடிவாதத்தின் அரசியல் குறித்து பலரும் விம்சனங்களை முன் வைத்து வருகின்றார்கள். குறிப்பாக இளைய தரப்பினர்தான் அதிகம் விமர்சிக்கின்றனர். முன்னணியினரின் சிறுபிள்ளைத் தனமான ஒரே ஒரு காரணமும் ஆதாரமும் 2005இல் தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தலை புறக்கணிக்கச் சொன்னார்கள் என்பது மாத்திரமே. அன்றைக்கு எம்மிடம் நிலம் இருந்தது. அது தமிழர்களின் ஆளுகைக்குள் இருந்தது. ஆயுதப் போராட்டம் இருந்தது. அது ஒரு பெருங் காவலாக இருந்தது. தமிழ் மக்களுக்கு என்று உன்னதமான தன்னலமற்ற, தியாகம் மிகுந்த தீர்க்க தரிசனமான போராளித் தலைமையும் இருந்தது.

இன்று தமிழ் மக்களுக்கு தலைவர்கள் இல்லை. தலைவர்களற்ற சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எரியும் எல்லாப் பிரச்சினைகளிலும் நாங்கள் உங்கள் தலைவர்களில்லை என்பதையே தமிழ் மக்களின் பிரநிதிகள் உணர்த்துகின்றனர். அதைப்போலவே இப்போதும் இந்த தேர்தல் காலத்திலும் தமிழ் தலைமைகள் வெறும் ஆளனியினர் மாத்திரமே என்பதை நிரூபித்துக் கொண்டு வருகின்றனர். எனவே விடுதலைப் புலிகளற்ற இன்றைய காலத்தில், 2005ஆம் ஆண்டை காரணம் காட்டி தேர்தலை புறக்கணிக்கக் கோருவது என்பது, புலிகள் இயக்கத்திற்கு எதிரான செயலே ஆகும். மறுபுறத்தில் அது ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவானதாகவும் மாறுகின்றது. மகிந்த காலத்தில், வாக்களிப்பை தடுக்க பல்வேறு வேலைகளை மகிந்த கட்சியினர் மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட சில பாராளுமன்ற தேர்தலை நடாத்த அனுமதிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா பாராளுமன்றத்திற்கு சென்று எதனையும் சாதிக்க முடியாது என்ற போதும், வேறு சில வேலைத்திட்டங்களுக்காக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டது. ஆனால் மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் புலிகளின் நிலத்தில் இடம்பெறவில்லை. புலிகள் இல்லாத இன்றைய களத்தில் முன்னணியினர் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிட்டனர். வரும் மாகாண சபையிலும் போட்டியிடவுள்ளனர். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை மாத்திரம் புறக்கணிக்க வேண்டும் என்ற பிடிவாத்தில் என்ன நியாயம் இருக்கின்றது?

அல்லது முன்னணியினர் அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க வேண்டும். தமது கட்சியை ஒரு கட்சியாக அல்லாமல் ஒரு இயக்கமாக மாற்றி மக்களின் உரிமைக்கும் விடுதலைக்கும் வேலை செய்ய வேண்டும். இன விடுதலைப் போராட்டத்திற்காக துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்க வேண்டும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சிப் பெயரை மாற்றி தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணி என்று பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ் சமூகத்தில் தேர்தல்கால கட்சியாகவே முன்னணி இருக்கின்றது என்று முன்னணி ஆதரவாளர்களே குற்றம் சுமத்துவதுமுண்டு.

அண்மையில் கிளிநொச்சியில் நடந்த சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவரது கட்சியை சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன் பேசுகின்றபோது, 2005இல் வாக்களிக்காமல் விட்ட தவறினால் முள்ளிவாய்க்காலை சந்தித்தோம் என்று கூறுகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான பலரும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இதுதான் காரணம் என்று சொல்லி புலிகள் இயக்கம்மீது குற்றம் சுமத்தப் பார்க்கின்றனர். ஆனால் 2004இல் கருணா அம்மான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிக்கப்பட்டபோதே முள்ளிவாய்க்கால் தொடங்கிவிட்டது. விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கும் நசுக்கும் அரசியலைப் புரிந்தவர்கள் எவரும் இவ்வாறு சொல்லமாட்டார்கள். ஆனால் இன்றைக்கு, விஜயகலா இவ்வாறு பேசுவதற்கான வாய்ப்பை முன்னணியினர்தான் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என்பதே உண்மை.

திரு கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் தேர்தல் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி கடும் பிரசாரத்தில் ஈடுபடுவதை பார்த்து, 2004இல் பாராளுமன்ற தேர்தல் காலத்தில் கஜேந்திரனுக்காக பிரசாரம் செய்த அன்றைய பல்கலைக்கழக மாணவி ஒருவரும் கடும் ஆதங்கத்துடன் முகப்புத்தகத்தில் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். தமது பல்கலைக்கழக படிப்பு நேரத்தை ஒதுக்கி, பரீட்சைகளுக்கு தயராக வேண்டிய தருணத்தை விடுத்து தேர்தலில் வாக்களிக்குமாறு தாம் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை மாதிரி வாக்கு சீட்டை காண்பித்து மக்களுக்கு விளக்கம் ஊட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அன்றைக்கு வேலை செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கியவர்கள், இன்று தேர்தலை புறக்கணிக்குமாறு பிரசாரம் செய்வதை எண்ணி இன்று தம்மை தாமே நோவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தகைய கடுமையான விமர்சனங்கள், தேர்தலை புறக்கணிக்கக் கோரும் புத்தியற்ற செயலை மிக ஆழமாக கேள்விக்கு உள்ளாக்குகின்றன. உண்மைகளை அம்பலம் செய்கின்றன. இதைப்போல இன்னொரு இளைஞர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகிந்த ராஜபக்ச அரசியல் சூழ்ச்சியால் பிரதமர் பதவியை கைப்பற்றியபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைத்து பாராளுமன்ற வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தமையை நினைவுபடுத்தி, இன்று தேர்தலை புறக்கணிக்கக் கோரும் முன்னணிக்கும் மகிந்த தரப்புக்குமான ஒற்றுமையை சுட்டிகாட்டியுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதில் வடக்கு மாகாணத்தில் எண்பது வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். அத்துடன் யாழில் 90 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. எனவே தேர்தலை புறக்கணிக்க கோருபவர்களின் முடிவை மக்கள் நிராகரித்துள்ளதுடன் வாக்களிக்க வேண்டியதின் அவசியத்தை மக்கள் எடுத்துரைத்துள்ளனர். எனவே, மக்களின் இந்த முடிவுகளில் இருந்து, புறக்கணிக்கக் கோருபவர்கள், பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் தபால்மூல வாக்களிப்பு முடிந்த பின்னர்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாம் யாரை ஆதரிக்கிறோம் என்ற முடிவை அறிவித்துள்ளது. ஆனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை தமிழ் மக்கள் எடுத்த பின்னரே இவ்வாறு கூட்டமைப்பு தமது முடிவை அறிவித்துமுள்ளனர்.  

உண்மையில், தமிழ் தலைமைகள் என சொல்லிக் கொள்பவர்கள், முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளபோதும், தவறான முடிவுகளை எடுக்கின்ற போதும், தமிழ் மக்கள் தெளிவான முடிவை எடுக்கின்றார்கள். பொதுவாக எல்லா தேசங்களிலும் எல்லா விடயங்களிலும் மக்களுக்கு தலைவர்கள்தான் வழிகாட்டுவார்கள். ஈழத்தில் நடந்த உன்னதமான போராட்டமானது, மக்களுக்கு எழுச்சியும் விழிப்பும் மிகுந்த அரசியலை கற்றுக் கொடுத்துள்ளது. அதனால்தான் ஈழத்தில் தலைவர்கள் மக்களுக்கு வழிகாட்டாத போதும், முடிவுகளை எடுக்க முடியால் தவிக்கின்றபோதும், மக்கள் தலைவர்களுக்கு தெளிவான பாதையை காட்டுகிறார்கள். தமிழ் தலைமைகள் செய்ய வேண்டியதெல்லாம், மக்கள் காட்டும் பாதையில் சென்று தமிழ் இனத்தின் உரிமைகளைவெல்ல வேண்டியது மாத்திரமே.

தமிழ் குரலுக்காக தாயகன்