இந்நாட்டு முஸ்லிம்களின் வாக்கு இனவாதத்துக்கா?

1 rath
1 rath

கடந்த காலத்தில் சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சை, கருத்தடை மருந்து என இனவாதம் பேசியவர்கள் இன்று முஸ்லிம்களின் வாக்கைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருவது நகைப்பிற்குரிய விடயமாகும் என ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தம்புள்ள நெம்ரே விலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நீலமும் பச்சையும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். அவர்களின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக பெரும்பான்மை மக்கள் புதிய அரசியல் தலைமையொன்றை எதிர்பார்க்கின்றனர். பிரதான வேட்பாளர்கள் வாக்குறுதி பொதிகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.

நாவலப்பிட்டி முஸ்லிம்களைச் சந்தித்த மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி தங்களுக்கு 10 வீதமான முஸ்லிம்களின் வாக்குகளே கிடைக்கும் எனவும் அதனை 25 வீதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவ்வாறு கூடுதலான வாக்குகளைப் பெற்றுத்தந்தால், கண்டி நகரில் முஸ்லிம் பாடசாலை அமைப்பதாகக் கூறியுள்ளார்.

கருத்தடை சத்திர சிகிச்சை, கருத்தடை மருந்து என இனவாதம் பேசியவர்கள் இன்று வாக்கு பெறுவதற்காக வாக்குறுதிகளை வழங்குகின்றனர். சாய்ந்தமருதில் தனி உள்ளூராட்சி சபை பெற்றுத் தருவதாக வாக்களித்து ஆதரவு கோருகின்றனர். இரு பிராதான வேட்பாளர்களும் பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். 71 வருடங்கள் பிரதான கட்சிகளிடம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற வேண்டாம் என்று ​கோருகிறோம் எனவும் அவர் கேட்டுள்ளார்.