சந்திரிகாவை பார்த்து ஜொள்ளு விட்டேன் ஒப்புக்கொண்ட சிறிகாந்தா

1 s
1 s

இரண்டு அணியிலுமுள்ள முக்கிய தலைவர்களின் கைகளிலிருந்தும் இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கிறது.

அது எங்கள் குழந்தைகளின் இரத்தம், அது எங்கள் தாய்மாரின் இரத்தம், அது எங்கள் சகோதரிகளின் இரத்தம்.

யுத்தத்தை இவர்கள் நடத்தியிருக்க வேண்டியது, போராட்ட இயக்கங்களுடன். ஆனால் அப்பாவிகளுடன் போர் செய்தார்கள் என தெரிவித்துள்ளார் ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறிகாந்தா.

நேற்று (12) மாலுசந்தி மைக்கல் விளையாட்டரங்கில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபாய ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது எல்லோரும் தெரியும். ஞாபகசக்தியுள்ள, சுயமரியாதையுள்ள எந்த தமிழ் மகனும் கோட்டாபயவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆகவே, சஜித்திற்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்கியுள்ளது புதிய ஜனநாயக கூட்டணி.

தமிழ் மக்களிற்கு எதிரான அநியாயங்கள் என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல. 1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் மசோதா கொண்டு வரப்பட்டபோது, இன்றைய ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தந்தை செல்வா, வன்னியசிங்கம், எனது தாயாரின் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 400 தமிழ் அரசு கட்சி தொணடர்கள் அடிக்கபட்டார்கள். மிதிக்கப்பட்டார்கள். சிறுநீர் ஊற்றப்பட்டது.

1958இல் தமிழர்கள் மீது இனவன்முறை ஏவிவிடப்பட்டது. அது பண்டாரநாயக்கவின் காலம். நேற்று, முந்தநாள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் முகாமிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தந்தையின் காலத்தில் நடந்த கொடுமை.

பின்னர் ஜேஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் 1977, 81,83 களில் இனவன்முறை ஏவிவிடப்பட்டது. பிரகடனப்படுத்தப்படாத இனவெறி எவிவிடப்பட்டது. 1983இல் ஆரம்பித்தது 2009இல் முடிந்தது.

சஜித்திற்கு வாக்கு கேட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, சம்பந்தன் தலைமையிலான தமிழ் அரசு கட்சி நினைக்கிறது, நாம் எல்லாவற்றையும் மறந்து விட்டோம் என. 2006 ஓகஸ்ட் 9 இல் ஏ9 பூட்டப்பட்டதில் இருந்துதான் கொடுமைகள் அரங்கேறியதாக காட்டுகிறார்கள்.

சந்திரிகா நல்ல செல்லமாக பேசிவிட்டு சென்றார். அவர் அப்போது செல்லமாக பேசிய போது நாம் இரசித்து பார்த்தோம்.

அவரும் இரசிக்ககூடிய நிலையில் இருந்தார். நாமும் ரசிக்கும் வயதில் இருந்தோம். சோப் விளம்பரத்தில் வரும் நடிகைகளை போல இருந்தார்.

சந்திரிகாவிற்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம், நவாலி தேவாலயத்தில் குண்டு வீசப்பட்ட போது, யார் ஜனாதிபதி?

வாழைச்சேனையில் 5 பிள்ளைகளின் தாய் கோணேஸ்வரி சிதைக்கப்பட்டு, பெண்ணுறுப்பில் கிரனைட் செலுத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டபோது யார் ஜனாதிபதி? சின்னச்சிட்டு கிருசாந்தி கடத்தப்பட்டு, கொல்லப்பட்டபோது, அவரை தேடிச்சென்ற தாய், சகோதரன் கொல்லப்பட்டபோது யார் ஜனாதிபதி?

அந்த வழக்கில் சாட்சி சொன்ன சிப்பாய், கைதடி இராணுவ முகாமில் கிருசாந்தி நிர்வாணமாக நின்றதாகவும், அவரின் உடலில் இருந்து இரத்தம் வந்ததாகவும் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார். அந்த வழக்கை சென்று பார்க்ககூட நான் விரும்பவில்லை. அவ்வளவு கோரமானது. யார் அப்போது ஜனாதிபதி?

சந்திரிகா யாருக்கு கயிறு விடுகிறார்? யாருக்கு கதைவிடுகிறார்?

ஜனாதிபதியாக இருக்கும்போது நடவடிக்கை வேறு. பதவி போன பின்னர் அவருக்கு வேண்டிய வேட்பாளருக்கு வாக்கு கேட்டு வரும்போது கதை வேறு.

போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என ஜே.ஆர்.கூறி, போரை ஏவிவிட்டபோது, சஜித்தின் அப்பா பிரேமதாச அமைச்சராக இருந்தார். அப்போது இளைஞர் விவகார அமைச்சராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க.

இரண்டு அணியிலுமுள்ள முக்கிய தலைவர்களின் கைகளிலிருந்தும் இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கிறது. அது எங்கள் குழந்தைகளின் இரத்தம், அது எங்கள் தாய்மாரின் இரத்தம், அது எங்கள் சகோதரிகளின் இரத்தம். யுத்தத்தை இவர்கள் நடத்தியிருக்க வேண்டியது, போராட்ட இயக்கங்களுடன்.

சந்திரிகா சொல்கிறார், யுத்தம் வந்தது, பிரபாகரனிற்கு 42 கடிதம் எழுதினேன், அது எத்தனை காதல் கடிதமோ தெரியாது. பிரபாகரன் அதையெல்லாம் கேட்கவில்லையென்கிறார் என தெரிவித்தார்.