சனாதிபதி கோட்டபாய அவர்களை நோக்கி – வாழ்த்தும் கோரிக்கைகளும்!

Election risult copy 1
Election risult copy 1

இலங்கையின் ஏழாவது சனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். வடக்கு கிழக்கு பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்காத போதும் தெற்கின் பெரும்பான்மையின மக்களின் பெரும் ஆதரவு கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைத்துள்ளது. தேர்தலில் வாக்களிக்கப்பட்ட மக்களின் மனநிலையை காட்டும் இலங்கை சனாதிபதித் தேர்தல் 2019 வரைபடம், பல சேதிகளை சொல்லியுமுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் வாக்குகளின் உதவியுடன் ரணில் – மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவியேற்றது. எனினும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, இறுதியுத்த மீறல்கள் தொடர்பான விடயங்கள், காணிப் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் முதலியவை தொடர்பில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நிறைவு பெறாத நிலையே காணப்பட்டது.

எவ்வாறெனினும் வடக்கு கிழக்கு மக்கள் இம்முறையும் அதிகப்படியான வாக்களிப்பில் ஈடுபட்டதுடன் தமது முடிவிலும் ஒன்றுபட்டு காணப்படுகின்றனர். 2009 ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களுக்கு தெளிவாக வழிகாட்டும் தலைமை ஒன்று காணப்படாத போதும்கூட, மக்கள் தம் முடிவில்  உள ரீதியான ஒற்றுமையில் தொடர்ந்தும் ஒன்றுபட்டே பயணிக்கின்றனர்.

தமிழ் மக்களின் இந்த முடிவையும், அவர்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் இலங்கையின் ஒவ்வொரு சனாதிபதியும் புரிந்துகொள்ளாமலே காலம் கடந்து வருகின்றது. இதுவே இலங்கையின் வரலாறாகவும் இனச் சிக்கலுக்கான காரணியாகவும் தொடர்கின்றது. தமிழ் மக்களின் வாக்குக் கைகொடுப்பினால் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனகூட இவ்வாறே தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.

ஈழத் தமிழ் மக்களை அடக்குமுறைகளாலும் ஒடுக்குமுறைகளாலும் ஏமாற்றுதல்களாலும் கடந்துவிடவே இலங்கையின் ஒவ்வொரு சனாதிபதியும் தீர்மானித்துப் பயணிக்கின்றனர். இலங்கையின் பெரும்பான்மையின மக்கள் அதிகம் நேசிக்கும் ஒருவரை தமிழ் மக்கள் ஏன் நிராகரிக்கின்றார்கள் என்பதை இலங்கை சனாதிபதி ஒருவர் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டாலே இலங்கைப் பிரச்சினை தீரும்.

அத்தகையதொரு சந்தர்ப்பத்தை இலங்கையின் புதிய சனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு வரலாறு வழங்கியுள்ளது. தமிழர்கள் இந்த தேர்தல் முடிவின் வாயிலாகவும்கூட தெளிவான கோரிக்கையை இலங்கை சனாதிபதியிடத்தில் விடுத்துள்ளனர். கடந்த 2005இல் புதிய சனாதிபதியாக பதவியேற்றவருக்கு ஒரு சந்தர்பத்தை தமிழர் தேசம் அன்று வழங்கியது. ஆனால் அந்த வாய்ப்பு தூக்கி வீசப்பட்டு, இலங்கையில் பாரியதொரு இன அழிப்பில் முடிந்தது வரலாறு. அது தொடர்பான வாதங்களும் பிரச்சினைகளும் இன்னமும் எரியும் நிலையிலேயே உள்ளது.

இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு சவால் நிறைந்த ஒரு பயணத்தையே வரலாறு தொடக்கி விட்டுள்ளது. கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை வழங்குவதுடன், தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்சியை தொடர இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்வரவேண்டும். கடந்த காலத்தில் நெகிழ்ச்சியாயிருந்த சர்வதேசத்தின் கரங்களும் இதனை வலியுறுத்தவே செய்யும்.

அத்துடன் 2009இல் இலங்கைத் தீவில் நடைபெற்ற போர், வரலாறு முழுவதும் தேர்தலையும் அரசியலையும் தீர்மானிக்கும் என்பதையே இந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் துணிந்து கூறியுள்ளனர். இதனை புதிய ஜனாதிபதியும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதுவே தமக்கு வாக்களித்த பெரும்பான்மையின மக்களுக்கு மாத்திரமின்றி, அவருக்கு வாக்களிக்காதுவிட்ட சிறுபான்மையின மக்களுக்கும் அவர் சனாதிபதியாக இருக்கப் போகின்றாரா என்பதற்கு விடையளிக்கும் விடயமாகும்.

மக்களின் ஊடகங்கள் சனநாயகத் தீர்ப்புக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இன்றைய உலகச் சூழலில், தமிழர்கள் சனநாயக ஆயுதம் கொண்டே போராட வேண்டிய நிலையில் உள்ளனர். அதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அத்துடன் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்டு வாழும் தமிழ் மக்களின் சனநாயக வெளிப்பாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், தமிழ் மக்கள் உரிமையுடன் நிம்மதியாக வாழும் யுகம் திரும்ப வேண்டும் என்பதையும் மக்களின் ஊடகம் என்ற வகையில் வலியுறுத்துகிறது தமிழ்க்குரல்.

– தமிழ்க்குரல் ஆசிரியர்பீடம்