19வது திருத்தத்தினை கையிலெடுக்கும் மஹிந்த

mahinda 1
mahinda 1

நாட்டின் ஆட்சி முறைமை மற்றும் அரசியலமைப்பை முழுமையாக திருத்தியமைத்து நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தினையும் வளப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்றைய தினம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையினால் இதற்கு முன்னர் காணப்பட்ட அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களையும் விட இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வித்தியாசமானதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீண்டும் ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதே தமது எதிர்பார்ப்பு என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்கள் பின்னோக்கிப் பயணித்துள்ள நாட்டை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, நாட்டின் பொருளாதாரத்தை ஆரம்பத்திலிருந்து கட்டியெழுப்பி நாட்டின் ஆட்சி முறைமை மற்றும் அரசியலமைப்பை முழுமையாக திருத்தியமைப்பதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக தவல்களை மக்களுக்கு முன்வைப்பதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணைக்கு முன்பாக, அரசாங்கம், பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு மதிப்பளித்து செயற்படும் என எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.