ஐ.தே.க இன் அடுத்த பிரதித்தலைவர்?

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்சவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பிரதித் தலைவர் யார் என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இன்றைய தினம் அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கும் இன்றைய கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் யார் என்பது பற்றிய தீர்மானங்களும், அமைச்சரவையை கலைப்பது தொடர்பிலான தீர்மானங்களும் வௌியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து புதிய அரசை அமைப்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்லியேற்பட்டிருந்தாலும் பராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்கே பெரும்பான்மை பலம் உள்ளது.

புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் பொதுஜன முன்னணி சங்கடமான நிலைமையை எதிர்கொண்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த குழப்ப நிலைமைக்கு பாராளுமன்ற தேர்தல் தீர்வாக அமையும் என கூறப்படுகிறது. அதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளினதும் இணக்கத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்.