119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் – அஜித் ரோஹண

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

அன்றாடம் இடம்பெறும் திடீர் விபத்துகள், அனர்த்தங்கள், பாரிய குற்றச்செயல்கள் தொடர்பில் துரிதமாக காவல்துறையினருக்கு அறிவிப்பதற்கு 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காவல் அவசர அழைப்புப் பிரிவு எனப்படும் 119 துரித அழைப்பு சேவையை சிலர் தவறாக பயன்படுத்துவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான ஆய்வினை மேற்கொண்டதன் பின்னர் இந்த நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு 2020 ஆம் ஆண்டில் 1,232,272 அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த புள்ளிவிபரங்களின் படி நாளொன்றுக்கு 3000க்கும் அதிகமான அழைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளமை தெரியவருகிறது.

இதனிடையே காவல்துறை அவசர அழைப்புப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள நாளொன்றில் 8000க்கும் அதிகமானோர் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வுக்கமைய, அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெறும் அழைப்புகளில் 93 சதவீதமானவை தேவையற்ற விடயங்களுக்காக மேற்கொள்ளப்படும் அழைப்பு என தெரியவந்துள்ளது. இது காவல்துறை அவசர பிரிவினரின் பணிகளுக்கும் இடையூறாக உள்ளது.

எனவே, திடீர் விபத்துகள், அனர்த்தங்கள், பாரிய குற்றச்செயல்கள் என்பன தொடர்பில் அறிவிப்பதற்காக மாத்திரம் 119 அவசர அழைப்பு இலக்கத்தை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோருகின்றனர்.