இளவாலை கலாபூசணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களுக்கு விக்னேஸ்வரன் அஞ்சலி!

vikki
vikki

இளவாலை கலாபூசணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களின் மறைவு குறித்த இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பி வைப்பதன் மூலம் எனது ஆழ்ந்த அனுதாபங்களை எமது மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

சைவக்குழந்தைகள் அனைவரும் பண்ணோடு தேவாரம் பாடப் பழக வேண்டும் என்ற கருத்தை உடையவராக இருந்தார். இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் அவர்கள் தமது ஓய்வின் பின்னரும் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு பல வழிகளில் முயன்றதுடன் அகில இலங்கை திருமுறைக்கலாமன்றத்தின் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றி ஆலயம் தோறும் திருமுறைகள் பண்ணோடு ஒலிக்க அயராது உழைத்தவர். சைவக் குழந்தைகள் அனைவரும் பண்ணோடு தேவாரம் பாடப் பழக வேண்டும் என்ற கருத்தை உடையவராக இருந்தார்.

சிறந்த சமயப் பேச்சாளர் நாடக ஆசிரியர், எழுத்தாளர் என பல பரிமாணங்களுடன் சைவப் புலவர் சங்கம், சைவ சித்தாந்த மையம் சைவ பரிபாலனசபை, கொழும்பு தமிழ்ச் சங்கம், தெல்லிப்பளை கலை இலக்கியக்கழகம் என பல அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்து அரிய பல சேவைகளை ஆற்றியவர். சைவப் புலவர் சங்க உப தலைவராக சைவப் புலவர் சங்கத்தின் செயலாளராக தேர்வுச் செயலாளராக அரும்பணியாற்றி பல சைவ சித்தாந்தப் புலவர்களை உருவாக்கி எமக்களித்த பெருமைக்குரியவர்.

அமரத்துவம் அடைந்த தனது மனைவியின் பெயரால் ஆண்டுதோறும் அரிய பல நூல்களை வெளியிட்ட இப்பெருமானாரின் மறைவு சைவத் தமிழ் மக்களுக்கும் குறிப்பாக இளைஞர் யுவதிகளின் சீரிய வழிகாட்டல்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். எனினும் அவர் போன்ற இளைஞர் யுவதிகள் அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன். தற்போது சைவம் வெறும் சம்பிரதாயமாகவும் தமிழ் ஒரு கொச்சை மொழியாகவும் மாறி வருவதை அவதானிக்கின்றேன். எமது பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஊக்கம் காட்டாவிட்டால் சைவமுந் தமிழும்
அழியும் காலம் வெகு தொலைவில்லை. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிப் பணிகின்றேன் எனக்குறிப்பிட்டார்.