இலங்கை மாணவி கண்டுபிடித்த குண்டு துளைக்காத கவச உடை!

9 4
9 4

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்விகற்றுவரும் இலங்கை மாணவி ஒருவர் உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட குண்டு துளைக்காத கவச உடை ஒன்றை தயாரித்துள்ளார்.

சிட்னி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பினை தொடர்ந்து வரும் பிரபானி ரணவீர என்பவரே மூன்று உலோகத்தினாலான குறித்த கவச உடையை தயாரித்துள்ளார்.

தனது, முதுகலை பட்டப்படிப்பை முடிக்க அவர் மேற்கொள்ள வேண்டிய ஆராய்ச்சிக்காக இந்தப் புதிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்.

உலகில் குண்டு துளைக்காத உடைகள் இன்று வரையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, எனினும் அவற்றை அணிந்தவாறு தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும்போது, உணரப்படும் அதிர்ச்சியை உடலால் தாங்க முடியாதமையினால் உயிர்சேதங்கள் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அத்துடன், துப்பாக்கி சூட்டின்போது, ஏற்படும் கதிரியக்க செயற்பாடுகளால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாத போதிலும் அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மேம்படுத்தப்பட்ட, உயர் தொழில்நுட்பத்திறன் கொண்ட குண்டு துளைக்காத உடை, போர்க்களத்தில் ஏற்படும் உயிரிழப்பிலிருந்து பாதுகாக்கிறது என்பதை தனது ஆராய்ச்சியில் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக மாணவி பிரபானி ரணவீர தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பல வளர்முக நாடுகளில் அணு சோதனைகள் உருக்கு உலோகம் மற்றும் அலுமினியத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் நம்புகிறார்.

புதிய வடிவமைப்பின் எடையை வெகுவாகக் குறைக்க உருக்கு தவிர, டைட்டானியம் மற்றும் அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தக் கண்டுபிடிப்பு, தாக்குதலின் பின்னரான மன உளைச்சலை 80 சதவீதம் வரை குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரபானி ரணவீர இதனைத் தெரிவித்தார்.