நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து

20
20

நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் யாவும் தடைப்பட்டிருந்த பின்னர் நாளையதினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்து சேவையினை மாகாணத்துக்கு உட்பட்டு நடத்த உள்ளதாகவும் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக பயண சேவைகள் யாவும் நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற உள்ளதாகவும், பஸ்ஸில் பயணம் செய்யும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அதாவது கைகளுக்கு கையுறைகளை அணிந்து முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் எனவும் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதி ,நடத்துனர்களாக சுமார் 3500 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், எனினும் பொதுமக்களின் நலன் கருதியே நாளைய தினத்தில் இருந்து குறித்த சேவையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் சி.சிவபரன் மேலும் தெரிவித்துள்ளார்.