கனவுத் திட்டத்தை கலைத்த கயவர்கள் – விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

viki arivayutham
viki arivayutham

மத்திய கிழக்குச் சர்வதேச நிறுவனம் ஊடாக வன்னியில் ஏற்றுமதிக்கான பழமரங்கள் மற்றும் மரக்கறிகள் வளர்ப்புச் செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கியதாகவும் அது சில சதித் திட்டங்களால் வெற்றிபெற முடியவில்லை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே வடமாகாண முன்னாள் முதலமைச்சர் இவ்விடயம் தொடர்பாக தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

‘வடக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தில் செய்யக் கூடிய அதிகாரம் இருந்தும் நான் செய்யவில்லையே என இன்றும் உங்கள் மனதை உறுத்தும் சம்பவம் எது? அது எதனால் செயற்படுத்த முடியவில்லை என நினைக்கிறீர்கள்?’ எனத் தமிழ்க் குரல் எழுப்பிய கேள்விக்கு விக்னேஸ்வரன் அளித்த பதில் ,

“பலரதும் அனுசரணைகளைப் பெற்று ஒரு மத்திய கிழக்கு சர்வதேசக் கம்பனி ஊடாக வன்னியில் ஏற்றுமதிக்கான பழமரங்கள், மரக்கறிகள் வளர்ப்புச் செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கினேன். அதற்குரிய காணியை நாங்கள் தெரிவு செய்திருந்தோம்.

சூழல், நிலம், நீர், போக்குவரத்து போன்ற பலவற்றைப் பற்றியதுமான அறிக்கையைப் பெற்றிருந்தோம். இடத்தை வந்து மத்திய கிழக்குக் கம்பெனி உரிமையாளர்கள் பார்த்துவிட்டு தமது பெருமகிழ்வை வெளியிட்டிருந்தார்கள். உலகத்தின் பல பாகங்களிலும் இவ்வாறான செயற்றிட்டங்களை ஏற்று நடத்தும் அவர்கள் எமது நீர், நிலம், மண், சூழல், போக்குவரத்து போன்ற பலதைப் பற்றியும் புகழ்ந்தார்கள். நல்லதொரு செயற்றிட்டம் வெகுவிரைவில் நடைமுறைப்படுத்தப்படப் போகின்றது என்று
எமக்கு உறுதிமொழி கூடத்தந்தார்கள். நாமும் எதிர்பார்த்திருந்தோம். செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரேயொரு அனுமதி மட்டும் இருந்தது. கொழும்பில் இருந்த காணி
அலுவலக செயலாளர் நாயகத்தின் அனுமதி பெற்வேண்டியிருந்தது. மற்றவை சரியெனில் அது பொதுவாகவே வழங்கப்படும் ஒரு அனுமதி. ஆனால் அது கிடைக்கவில்லை. நாட்களில் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அனுமதி மாதங்களாகியும் கிடைக்கவில்லை. கேட்டறிந்த போது அனுமதி வழங்க முடியாது எனப்பட்டது. காரணம் குத்தகைக்கு விடப்படவிருந்த குறித்த காணியில் ஒரு பகுதி வனத் திணைக்களத்திற்கு உரியது எனப்பட்டது. அது பிழை என்று வரைபடங்கள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டது.


அந்த வரைபடங்கள் பழையன என்றும் 2007ல் புதிய வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது. 2007 ல் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தமை எடுத்துக் காட்டப்பட்ட போது தாங்கள் நிலத்தைப் பார்வையிடாமல்
Google மூலம் இடங்களை வன இலாக்காவிற்குப் பாரப்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது. காணி அடையாளங்களை Googleன் ஊடாக குறித்துக் கொண்டமை சட்டத்திற்கு ஏற்புடையதாகுமா என்று கேட்ட கேள்விக்கு பதில் தரப்படவில்லை. செயற்றிட்டம் அமுல்படுத்த முடியாமல் போயிற்று.
எதனால் செயற்படுத்த முடியவில்லை என்று எமக்குத் தெரியாது. வடமாகாணம் முன்னேறுவது மத்திய அரசாங்கத்திற்குப் பிடிக்காமல் அனுமதி தராது விடப்பட்டதோ
தெரியாது. மேலும் எம்முள் சிலர் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் விக்னேஸ்வரன் எங கோ போய்விடுவான். இதை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும்
என்று கூறியதாக எனக்கு செய்தி ஒன்று வழங்கப்பட்டது. அதன் சரி பிழை எனக்குத் தெரியாது. ஆகவே எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருந்து கொத்தியது என்பது எனக்குத் தெரியாது. கொத்தி விட்டன. சகல அதிகாரங்கள் இருந்தும் சகல அறிக்கைகள் பெற்றும் மத்திக்களிக்கப்பட்டிருக்கும் மேற்பார்வை அதிகாரம் எம்மைத் தோல்வியைத் தழுவ வைத்துவிட்டது.
இதனால்த்தான் நாங்கள் சமஸ்டி ஆட்சி கேட்கின்றோம்.”

தமிழ்க் குரலுக்கு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய முழுமையான நேர்காணல்: