45வது ஆண்டில் இளையராஜா

i3 12
i3 12

இசைஞானி எனும் இளையராஜாவை தமிழ் சினிமாவிற்கு தந்த நாள் இன்று(மே 14). அன்னக்கிளி படம் வெளியாகி இன்றோடு 44 ஆண்டுகள் முடிந்து 45வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப்படம் மூலம் தான் இளையராஜா எனும் மாபெரும் மேதை இந்த இசை உலகிற்கு கிடைத்தார். அவரைப்பற்றி அவரது மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி நம்மிடம் கூறியதாவது

ஒழுக்கம், அர்ப்பணிப்பு, நேர்மை, அன்மிகம், நேரம் தவறாமை, பொறுப்புடன் நடந்து கொள்வது. இவை எல்லாமே அப்பாவிடம் நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். அப்பா பிஸியாக இருந்த காலத்தில் கூட வீட்டிற்கு வந்தால் டென்ஷனாக இருக்க மாட்டார். ஒரு முறை மட்டும் நாங்கள் குழந்தையாக இருந்தபோது வீட்டில் இருந்த போனை தூக்கிப்போட்டு உடைக்கும் அளவுக்கு கோபமாக இருந்தார். நாங்களே அவரை பார்த்து மிரண்டு போய் அமைதியாக இருந்தோம்.

சின்ன வயதில் அப்பாவை நாங்கள் பார்த்த நேரம் குறைவு தான் அதிகாலையிலேயே ஸ்டுடியோ போய்விடுவார். நள்ளிரவு தான் வீடு திரும்புவார். எப்போதாவது ஒரு முறை இரவு 9 மணிக்குள் வந்தால் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிடுவோம், பேசுவோம். சமயங்களில் அவரை பார்த்து பல நாட்கள் ஆன நிகழ்வு கூட நடந்துள்ளது. அப்போது எங்களுக்கு கிடைத்த ஒரு சின்ன சந்தோஷம் என்றால் ஞாயிற்றுகிழமை கம்போசிங்கிற்காக வெளியே செல்வார். அப்போது அவர் ஒரு அறையிலும், நாங்கள் குடும்பமாக ஒரு அறையில் இருப்போம். அவ்வப்போது எங்களை வந்து பார்ப்பார், நாங்களும் அவரை பார்ப்போம். மற்ற நேரங்களில் விளையாடுவோம். அந்த நாள் செம்ம ஜாலியாக இருக்கும்.

நான் இசையமைத்த பாடல்களை அப்பா கேட்டால் அவர் சொல்லும் ஒரே விஷயம், நன்றாக பயிற்சி எடு, நிறைய கற்றுக்கொள் என்பது தான். அப்பாவின் இசையின் பெரும்பாலான பாடகர்கள் பாட பயப்படுவார்கள். ஆனால் எஸ்.பி.பி., ஜானகி, சித்ரா போன்றவர்கள் எந்த பயமும் இன்றி சுலபமாக பாடி செல்வார்கள். தொழில் விஷயத்தில் நாங்கள் பாடினாலும் எங்களிடமும் கண்டிப்புடன் தான் அப்பா இருப்பார். அவரது இசையில் நான் பாடிய பாடலுக்கு தேசிய விருது வாங்கியபோது பலரும் அப்பாவுக்கு போனில் வாழ்த்து சொன்னபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இன்றைக்கு அன்னக்கிளி படம் வந்து 45வது ஆண்டு. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இப்போது நிறைய பேர் மன அழுத்தத்தில் இருங்காங்க. அவர்களுக்கு எல்லாம் அப்பாவின் இசையும், பாடல்களும் தான் உதவியாக உள்ளது. அப்பா இன்னும் நிறைய சாதிக்கணும் என்று வாழ்த்துகிறேன். ரசிகர்களுக்கு நன்றி என்றார்.