சற்று முன்
Home / சினிக்குரல் / படப்பிடிப்பு தொடர அனுமதியுங்கள் ; அரசிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை
i3 3 5
i3 3 5

படப்பிடிப்பு தொடர அனுமதியுங்கள் ; அரசிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை

கொரோனாவால் 4ம் கட்டமாக நாடு முழுக்க மே 31 வரை ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்கள் தவிர்தது 25 மாவட்டங்களுக்கு பல புதிய தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கால் சினிமா துறை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. இந்நிலையில் ஹாலிவுட் போன்று தமிழ் சினிமாவிற்கும் படப்பிடிப்பு துவங்க அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் அரசிடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று(மே 18) அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து சின்னத்திரை படப்பிடிப்பு துவங்க முதலில் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

இவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சார்பில் டி.சிவா, இயக்குனர் மனோபாலா, பி.எல்.தேனப்பன், ஜே.சதீஷ் குமார், தனஞ்செயன், ஆர்.கே.சுரேஷ், சுரேஷ் காமாட்சி, பஞ்சு சுப்பு மற்றும் விடியல் ராஜு ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேசி கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் போஸ்ட்- புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5.2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடுத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

தற்போது போஸ்ட்- புரொடக்ஷன் பணிகளை, தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், சுகாதாரமான முறையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, மிகவும் கவனமாக செய்து வருகிறோம். அதே போல், ஷூட்டிங் பணிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

11 தொழிற்துறைகளுக்கு எவ்வாறு தற்போது நிபந்தனையுடன் கூடிய அனுமதி (100 பேருக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்கள் பணிபுரிய அனுமதி) வழங்கியிருப்பதை போன்று, 50 சதவீதம் திரைத்துறை தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கு கொள்ளும்) நாங்கள் ஷூட்டிங் பணிகளையும் தொடர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்கனவே திரைப்படங்களை தொடங்கி முழுமையடையாமல் இருக்கும் 50 படங்களுக்கு தற்போது இந்த ஷூட்டிங் அனுமதி கோருகிறோம். இந்த ஷூட்டிங் அனுமதி மூலம், திரைத்துறை சம்பந்தப்பட்ட 10,000 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைக்கும். எனவே கனிவுடன் எங்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதேப்போன்று தயாரிப்பாளர்கள் சார்பில் மற்றொரு அணியினரும் தனியாக அமைச்சர் மற்றும் முதல் அமைச்சரிடம் படப்பிடிப்பு பணிகள் துவங்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

x

Check Also

Nasar

இனி படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் – நாசர்

கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமா படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கும் என நடிகர் நாசர் ...